வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (08/12/2018)

கடைசி தொடர்பு:23:30 (08/12/2018)

`ஐகோர்டை யாரும் உரிமை கொண்டாட முடியாது’ - மூடப்பட்ட நீதிமன்ற வாயில்கள்!

பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் பாரம்பரிய நடைமுறைப்படி, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஏழு வாயில்களும் இன்று இரவு 8மணி முதல் நாளை இரவு 8மணி வரை ஒரு நாள் மூடப்படுகிறது. 

சென்னை உயர்நீதிமன்றம்

150 ஆண்டுகள் பழமையும், பெருமையும் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தை, சட்டத்துறையைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் அரசின் பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். அதேநேரத்தில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கின்றது. இந்த வளாகத்தை அனைவரும் பயன்படுத்தினாலும், யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை அனைவருக்கும் உணர்த்தும் வகையிலும், தனது மேலாதிக்கத்தை நிலை நாட்டும் வகையிலும் சென்னை உயர்நீதிமன்றம் ஆண்டுக்கு ஒரு நாள் மூடப்படுவது வழக்கம்.

சென்னை உயர்நீதிமன்றம்

அதன்படி, உயர் நீதிமன்றத்தின் ஏழு வாயில்களும் டிசம்பர் 8-ம் தேதியான இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை மூடப்படும் என்று உயர் நீதிமன்ற நிர்வாகப் பதிவாளர் தேவநாதன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன் நகல் அனைத்து வாயில்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த 24 மணி நேரத்தில் நீதிமன்ற வளாகத்துக்குள் அரசு துறையினர், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் என யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கன்னிகாபரமேஸ்வரி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உயர் நீதிமன்றம் கட்டப்பட்டதால் ஆண்டில் ஒரு நாள் உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டு, சாவி கோவிலில் வைக்கப்படும் பாரம்பரிய நடைமுறை இன்றளவும் தொடர்கிறது.