`நான்கு வழிச்சாலை திட்டத்தில் 2ஆயிரம் கோடி ஊழல்’ - தேவசகாயம் ஐ.ஏ.எஸ் குற்றச்சாட்டு! | Rs. 2000 crore Corruption at The four-way road

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (09/12/2018)

கடைசி தொடர்பு:02:00 (09/12/2018)

`நான்கு வழிச்சாலை திட்டத்தில் 2ஆயிரம் கோடி ஊழல்’ - தேவசகாயம் ஐ.ஏ.எஸ் குற்றச்சாட்டு!

நான்கு வழிச்சாலை அமைப்பதில் ரூ.2000 கோடி ஊழல் நடந்ததற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன என ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் தெரிவித்தார்.

தேவசகாயம்

ஓகி புயல் பாதித்து ஒரு ஆண்டுகள் ஆகியும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மீண்டெழும் குமரி அமைப்பின் செயலாளர் தேவசகாயம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இயற்கை பேரிடரை தடுக்க மத்திய அமைச்சர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜி.எஸ்.டி.யால் நிதி இல்லாமல் அரசு தவிக்கிறது. பேரிடர் ஏற்பட்டால் மத்திய அரசு முழுமையாக ஈடுபட வேண்டும், ஆனால் மத்திய அரசு ஈடுபடவில்லை. ஓகி புயலில் அழிந்தவை சீரமைக்கப்படவில்லை. வளர்ச்சி என்ற பெயரில் குமரி மாவட்டத்தை அழிக்கப்பார்க்கிறார்கள். நான்கு வழிச் சாலையால் குமரி மாவட்டத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சாலையால் மாவட்டத்தை இரண்டாகப் பிளந்துவிட்டார்கள். 120 அடி ஆழத்திற்குப் பாறைகளை உடைத்து நிலத்தடி நீர் ஓட்டத்தைத் தடுத்துவிட்டார்கள். எனல்வே நான்கு வழிச் சாலைக்கு மறுபக்கம் தண்ணீர் இருக்காது.

தேவசகாயம்

இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுவிடும். ஏற்கனவே உள்ள சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுங்கள் என்றதை ஏற்கவில்லை. நான்கு வழிச் சாலையை முழு வேகத்தில் செய்தாலும் 10 ஆண்டுகள் ஆகும். நான்கு வழிச் சாலைக்காக ஆரல்வாய்மொழியில் இருந்து மண் எடுக்கப்பட்டது. அதுகுறித்து நாங்கள் ஆட்சித்தலைவரிடம் பேசியதால் நிறுத்தினார்கள். இப்போது காவல்கிணற்றில் இருந்து மண் எடுக்கிறார்கள். வளர்ச்சி என்ற பெயரில் குமரி மாவட்டத்தை அழிக்கப்போகிறார்கள். குமரியில் மும்பையை விட பெரிய துறைமுகம் அமைக்க முயல்கிறார்கள். இந்த துறைமுகம் விழிஞ்ஞம் துறைமுகத்தைப் போன்று 4 மடங்கு பெரியதாக அமையும். நான்கு வழிச் சாலை அமைப்பதில் ரூ.2000 கோடி ஊழல் நடந்ததற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன.

தேவசகாயம்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரண்டுபேர் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாது மணல் சம்பந்தமாக மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து தகவல் சேகரிக்க வந்தார்கள். அப்போது குமரி மாவட்டத்திற்கு வந்து என்னைச் சந்தித்தார்கள். மணவாள குறிச்சி மணல் ஆலையில் பங்குதந்தை கிளிட்டசுக்கு தெரிந்தவர்கள் இருந்தார்கள். அவர்களை பார்ப்பதற்காக அனுமதிபெற்று அந்த நபரை பார்த்துவிட்டு வந்தனர். 5 நிமிடமே அந்த சந்திப்பு இருந்தது. அது குறித்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் காவல்துறைக்கு அவர்கள் விளக்கம் அளித்துவிட்டனர்" என்றார்.