வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (09/12/2018)

கடைசி தொடர்பு:04:00 (09/12/2018)

`தஞ்சை பெரிய கோயிலில் ஆன்மிக நிகழ்ச்சியை நடத்துவோம்’ - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உறுதி!

நீதிமன்ற உத்தரவு பெற்று தஞ்சை பெரிய கோயிலில் தியானம் மற்றும் யோகா நிகழ்ச்சியை நடத்துவோம் என வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் புதுக்கோட்டையில் தெரிவித்தார்.

ரவிசங்கர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் கலை அமைப்பு சார்பில் பல்வேறு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது. முன்னதாக, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடுவதற்காக, புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து சென்று மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் நிவாரணப்பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் , " தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பு சார்பில் நடத்தப்பட இருந்த நிகழ்ச்சி நீதிமன்ற உத்தரவால், ரத்து செய்யப்பட்டுள்ளது. தொல்லியல் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் அனுமதி பெற்று தான் தஞ்சை பெரிய கோவிலில் நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கோயிலில் நடத்த முடியாதது வருத்தமளிக்கிறது. அதேநேரம், சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதற்காகத் தான் நிகழ்ச்சியை வேறு இடத்திற்கு மாற்றி உள்ளோம். ஆனாலும், கோயில்களில் தான் ஆன்மீக சொற்பொழிவுகள் நடக்க வேண்டும். மக்கள் விரும்பியதின் பேரிலேயே தஞ்சை பெரிய கோயிலில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது.

வாழும் கலை அமைப்பு

இந்த நிலையில் இந்து மதத்தைச் சார்ந்தவனுக்கு நிகழ்ச்சி நடத்த தடை விதித்து இருப்பது ஆச்சரியமாக உள்ளது. மீண்டும் நீதிமன்ற உத்தரவு பெற்று தஞ்சை பெரிய கோவிலில் தியான நிகழ்ச்சி நடத்தப்படும். அயோத்தி பிரச்சனையில் நான் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறேன் விரைவில் பேச்சுவார்த்தை அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும். ஆனாலும், அதற்கு கால அவகாசம் எதுவும் நிர்ணயிக்க முடியாது. இதுவரையிலும் 25ஆயிரம் குடும்பத்திற்கு ஒரு டன் நிவாரணப் பொருட்கள் வாங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறோம். யமுனை நதிக்கரையை வாழும் கலை அமைப்பினர் அசுத்தப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நாங்கள், கட்டிய டெபாசிட் தொகையை மீண்டும் திருப்பித் தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மொழி அடிப்படையில் தனி நாடு கேட்பது என்பது ஏற்புடையது அல்ல. தமிழகத்தில் உள்ள பாரம்பரிய சிலைகளை பாதுகாக்க வேண்டியது நமது கடமை" என்றார்