‘கர்நாடக முதல்வரிடம் மேக்கே தாட்டூ பற்றி வலியுறுத்துவேன்’ - டெல்லி புறப்பட்டார் ஸ்டாலின் | M.k Stalin went delhi to participate in opposition parties meeting

வெளியிடப்பட்ட நேரம்: 09:33 (09/12/2018)

கடைசி தொடர்பு:10:29 (09/12/2018)

‘கர்நாடக முதல்வரிடம் மேக்கே தாட்டூ பற்றி வலியுறுத்துவேன்’ - டெல்லி புறப்பட்டார் ஸ்டாலின்

நாளை நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள இன்று காலை டெல்லி புறப்பட்டார் ஸ்டாலின்.

அடுத்த வருடம் இந்தியாவின் அனைத்துக் கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளனர். அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பா.ஜ.கவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தல் மக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்கும் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில் பா.ஜ.கவுக்கு எதிரான வியூகம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

அதற்கு முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ நாளை டெல்லியில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளச் செல்கிறேன். மேக்கே தாட்டூ தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியிடம் வலியுறுத்துவேன். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி பங்கேற்றால் அவரிடமும் இது தொடர்பாக வலியுறுத்துவேன்” எனப் பேசியுள்ளார். 

இன்று சோனியா காந்தியின் பிறந்தநாள். அதனால் டெல்லி சென்றுள்ள ஸ்டாலின் இன்று சோனியா காந்தியைச் சந்தித்து அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவிப்பார் என்றும் மேலும், அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்படவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்றவர்களுக்கு அழைப்பு விடுப்பார் என்றும் திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.