வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (09/12/2018)

கடைசி தொடர்பு:11:30 (09/12/2018)

‘நள்ளிரவில் திறக்கப்பட்ட மார்க்கபந்தீஸ்வரர் கோயில் சிம்மக்குளம்!’ - நூற்றுக்கணக்கான பெண்கள் புனித நீராடல்

கார்த்திகை கடைஞாயிறு விழாவையொட்டி, வேலூர் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் நள்ளிரவு சிம்மக்குளம் திறக்கப்பட்டது.

சிம்மக்குளம்

வேலூர் அடுத்த விரிஞ்சிபுரத்தில் மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் கோயில் இருக்கிறது. புகழ்பெற்ற சிவ தலங்களில் ஒன்றான இக்கோயிலில் உள்ள சிம்ம தீர்த்தக் குளத்தில் கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை பெண்கள் நீராடி, ஈரச் சேலையுடன் கோயிலில் தங்கி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். பேய், பிசாசு, பில்லி, சூனியம், வலிப்பு, தீவினைகள் நீங்குவதோடு திருமண வரம் கிடைக்கும் என்பதும் தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.

சிம்மக்குளம்

சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் கார்த்திகை கடை ஞாயிறு விழாவையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு சிம்மக்குளம் திறக்கப்பட்டது. ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் சிம்மக்குளத்தை திறந்து வைத்தார். இதில்  நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு சிம்மக் குளத்தில் நீராடிவிட்டு கோயில் பிரகாரத்தில் விழுந்து வணங்கினர். இதைத்தொடர்ந்து, இன்று காலை பிரம்மக்குளத்தில் தீர்த்தவாரி, பாலகனுக்கு உபநயன சிவதீட்சை, அதன்பிறகு திருமாட வீதி உலாக்கள் நடைபெற்றது. சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, பால், தயிர், பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தப்பட்டது. பக்தர்கள் நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர்.