`யார் துணையும் இல்லாமல் தி.மு.க.வை எதிர்க்கும் வலிமை அ.தி.மு.க வுக்கு உண்டு’ -கடம்பூர் ராஜூ | minister kadampoor raju press meet

வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (09/12/2018)

கடைசி தொடர்பு:12:59 (09/12/2018)

`யார் துணையும் இல்லாமல் தி.மு.க.வை எதிர்க்கும் வலிமை அ.தி.மு.க வுக்கு உண்டு’ -கடம்பூர் ராஜூ

`கருணாநிதியை தீய சக்தி என வர்ணித்துக் கொண்டு எம்.ஜி.ஆர். தொடங்கியது அ.தி.மு.க. இயக்கம். எனவே யார் துணையும் இல்லாமல் தி.மு.க.வை எதிர்க்கும் வலிமை அ.தி.மு.க.விற்கு உண்டு’ என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

கடம்பூர் ராஜூ

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டார். தோவாளை ஒன்றிய அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அ.தி.மு.க.வும் அ.ம.மு.க.வும் இணைந்தால்தான் தி.மு.க.வை எதிர்கொள்ளமுடியும் என்று தங்கதமிழ்ச் செல்வனின் கூறியுள்ள கருத்து அவரது சொந்தக் கருத்து.

ஆனால் இன்று அ.தி.மு.க.வை அம்மாவின் ஆன்மா துணையுடன் நடத்திவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர், பிரிந்து சென்றவர்கள் இணைந்தால் வரவேற்போம் என கூறியுள்ளனர். இது அவர்கள் அ.தி.மு.க.வில் இணைவதற்கான அழைப்புதான். கருணாநிதியை தீய சக்தி என வர்ணித்துக் கொண்டு எம்.ஜி.ஆர். தொடங்கியது அ.தி.மு.க. இயக்கம். எனவே யார் துணையும் இல்லாமல் தி.மு.க.வை எதிர்க்கும் வலிமை அ.தி.மு.க.விற்கு உண்டு. முதல்வர், துணை முதல்வர் அறிவித்தபடி அவர்கள் தானாக வந்து சேர்ந்தால் அவர்களைச் சேர்த்துக்கொள்ள கழகம் தயாராக இருக்கிறது.

admk meeting

மேக்கே தாட்டூ விவகாரத்தில் கர்நாடகா அமைச்சர் சிவகுமார் அவரது நன்மைக்காக அணை கட்டுவோம் என்கிறார். தமிழர் நலன் பாதிக்கும் வகையில் மேக்கே தாட்டூ மட்டுமல்ல எந்த இடத்தில் அணைக் கட்டினாலும் நாங்கள் எதிர்ப்போம். யார் எதிர்த்தாலும், எதிர்க்காவிட்டாலும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி தமிழகம் ஏற்றுக்கொண்டால்தான் காவிரியின் குறுக்கே அணை கட்டமுடியும் என்ற விதி உள்ளது. தமிழர்கள் நலனுக்கு எதிராகக் கர்நாடகம் செயல்படக்கூடாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், தமிழக பா.ஜ.க. தலைவி தமிழிசையும் கூறியுள்ளார்கள். கண்டிப்பாகத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும். கஜா புயல் நிவாரணம் இன்னும் முழுமையாக அறிவிக்கப்படவில்லை. மத்திய அரசு முதற்கட்டமாக நிதி அறிவித்துள்ளது. மத்திய குழு ஆய்வு செய்த அறிக்கையைச் சமர்ப்பித்தபிறகு நிதி வழங்குவார்கள். கஜா புயலால் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளோம். நிச்சயமாக மத்திய அரசு நிதி அளிக்கும்" என்றார்.