வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (09/12/2018)

கடைசி தொடர்பு:16:00 (09/12/2018)

அரசுப் பள்ளியில் பெங்காலி கற்றுத் தர ஆசிரியை! - கரூர் ஆச்சர்யம்

சணப்பிரட்டி அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி

கரூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் வங்காள மொழி கற்றுத் தர ஆசிரியை ஒருவர் நியமிக்கப்பட்டு, கடந்த இரண்டு வருடங்களாக மாணவர்களுக்கு அவர் வங்காள மொழி கற்றுத் தருகிறார்.  

ஆசிரியை பொய்சாகி

கரூர் மாவட்டம்,சணப்பிரட்டியில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில்தான் வங்காள மொழி கற்றுத் தர பொய்சாகி என்ற பெங்காலி ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வருடமாக அவர் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு பெங்காலி கற்றுத் தருகிறார். கரூர் தொழில் நகரம் என்பதால், கொல்கத்தா, ஒரிசா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வங்காள மொழி பேசும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சணப்பிரட்டி பகுதியில் தங்கி,வேலை செய்து வருகின்றன. அவர்களின் குழந்தைகளுக்கு அவர்களது தாய்மொழியான பெங்காலியைக் கற்றுத் தர ஏதுவாகதான் பெங்காலி தெரிந்த பொய்சாகி என்ற பெண்ணை ஆசிரியராக நியமித்துள்ளார்கள்.

மாலதி (தலைமை ஆசிரியை)

இதுபற்றி நம்மிடம் பேசிய அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மாலதி, ``கரூரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் மற்றும் கொசுவலை தயாரிக்கும் தொழிற்சாலைகள்,பஸ்பாடி கட்டும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிய 500க்கும் அதிகமான வங்காள மொழியைத் தாய்மொழியாக கொண்ட குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. அவர்களின் குழந்தைகள் கல்வி கற்க வசதியாகதான் இப்படி பெங்காலி தெரிந்த ஆசிரியையை எங்க பள்ளியில் நியமித்துள்ளோம்.

பொய்சாகி (பெங்காலி ஆசிரியை)

அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமாகதான் இந்த ஆசிரியை ரெண்டு வருடங்களுக்கு முன்பு எங்க பள்ளியில் நியமிக்கப்பட்டுள்ளார். எங்க பள்ளியில் மொத்தம் 48 பெங்காலி மாணவர்கள் படிக்கிறார்கள். நம் மாணவர்கள் 17 பேர்தான் இங்கே படிக்கிறார்கள். கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி அரசுப் பள்ளியில் கடந்த பத்து வருஷமா அங்கு படிக்கும் வெளிமாநில மாணவர்கள் பெங்காலி மொழியைக் கற்க ஏதுவாக  ஆசிரியைகள் நியமிக்கப்பட்டு, பாடம் நடத்தி வந்தார்கள்.

ஆசிரியைகளுடன் மாணவர்கள்...

அதை பார்த்துட்டுத்தான் எங்க பள்ளியில் படிக்கும் பெங்காலி மாணவர்கள் அவர்களின் தாய் மொழியை கற்க ஆசிரியையை நியமித்தோம். வெளிமாநில மாணவர்களின் கல்வித்திறன் மேம்படுவதற்காக இந்த முயற்சி. ஆரம்பத்தில் வங்காள மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட சிறுவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தார்கள். அவர்களின் பெற்றோர்களும் அவர்களை பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க விரும்பாமல் இருந்தார்கள். அவர்களை சிரமப்பட்டுதான் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி பள்ளியில் சேர்த்தோம். அவர்கள் ஆரம்பத்தில் மொழி புரியாமல் தவித்தார்கள். அதனால்,அவர்கள் கல்வி கற்க வசதியாக பெங்காலி தெரிந்த ஆசிரியையை நியமிக்க முடிவு செய்தோம். பெங்காலி சொல்லித் தரும் ஆசிரியை பொய்சாகியும் பெங்காலி பெண்தான். அவர் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார்" என்றார்.