தி.மு.க-வுக்கு திருப்பம் தருமா திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கு? | D.M.K to expect Thirupparankundram by election challenge case judgement

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (09/12/2018)

கடைசி தொடர்பு:16:26 (09/12/2018)

தி.மு.க-வுக்கு திருப்பம் தருமா திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கு?

தி.மு.க-வுக்கு திருப்பம் தருமா திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கு?

'நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகுதான் திருப்பரங்குன்றம் தொகுதிக்குத் தேர்தல்' என்று இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதால், தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வருமா அல்லது எதிராக வருமா என்ற பதற்றத்தில் ஆளும் அ.தி.மு.க-வினர் உள்ளனர். காரணம், திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்குகளை 'கவர்' செய்ய அனைத்து வேலைகளையும் ஆளும்கட்சியினர் முடித்து விட்ட நிலையில், அத்தொகுதி மற்றும் திருவாரூர் தொகுதி நீங்கலாக காலியான 18 தொகுதிகளுக்கு பிப்ரவரி மாதத்தில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தநிலையில் தி.மு.க. வேட்பாளரான டாக்டர் சரவணன் போட்ட வழக்கால் திருப்பரங்குன்றம் தொகுதியை தேர்தல் நடத்தாமலேயே தி.மு.க. கைப்பற்றி விடுமோ என்று அ.தி.மு.க-வினரே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தொகுதியில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருந்த சீனிவேல் மறைவைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். 

'ஏ.கே.போஸின் வேட்பு மனுவில் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் கைரேகை மீது சந்தேகமுள்ளது, அதனால் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது' என்று அறிவிக்கக் கோரி, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சரவணன் வழக்குத் தொடர்ந்தார். ஜெயலலிதாவின் கைரேகை குறித்த சந்தேகம் பற்றி பல ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததால், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அலுவலர் முதல் தேர்தல் ஆணைய அதிகாரிகள்வரை, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்டனர். அடுத்ததாக, ஜெயலலிதாவின் கைரேகையை ஒப்பிட்டுப் பார்க்க பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நிலையில், 'ஜெயலலிதாவின் கைரேகையை ஆய்வு செய்யக் கூடாது' என்று உச்ச நீதிமன்றத்தில் ஏ.கே.போஸ் தரப்பில் தடை வாங்கப்பட்டது. இப்படி வழக்கு விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருந்த நிலையில், ஏ.கே.போஸ் மரணம் அடைந்தார்.

ஒரே தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களாக இருந்தவர்கள் தொடர்ச்சியாக மரணம் அடைந்த நிலையில் அ.தி.மு.க நிர்வாகிகள் அத்தொகுதியில் மீண்டும் போட்டியிட அச்சப்பட்ட நிலையில், அத்தொகுதி தினகரன் அணிக்கு போய்விடக்கூடாது என்பதால் முதல்வர் எடப்பாடி உத்தரவின்பேரில், அமைச்சர்கள் பலரும் கோடிக்கணக்கில் செலவு செய்யத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதனால், அத்தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க-வினர் இடையே போட்டி எழுந்துள்ளது. தினகரன் அணியினரும், தங்க தமிழ்செல்வன் தலைமையில் திருப்பரங்குன்றம் பகுதியில் தேர்தல் வேலைகளைத் தொடங்கிய நிலையில் 'ஆர்.கே. நகர் போன்று கோட்டை விட்டுவிடக்கூடாது' என்று அ.தி.மு.க-வினர் இப்போதே தீவிரமாக வேலை செய்யத் தொடங்கினர்.  

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ். உட்பட 20 அமைச்சர்களை அழைத்து வந்து பிரமாண்ட ஆலோசனைக் கூட்டம், சைக்கிள் பேரணியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நடத்தினார். அமைச்சர் செல்லூர் ராஜூவோ கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறு வணிகக்கடன்களை அள்ளி வழங்க ஆரம்பித்தார். புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பாவும் தன் பங்குக்கு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு நிதி அளித்தார். இப்படி எந்த நேரம் தேர்தல் வந்தாலும், அதைச் சந்திக்கும் வகையில் தேர்தல் பணிகளை அ.தி.மு.க-வினர் செய்து முடித்திருந்தனர். அதுமட்டுமல்லாது, 15 அமைச்சர்களைக் கொண்ட தேர்தல் பணிக்குழுவும் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில்தான், ''ஏகே போஸ் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தேன். தேர்தலின்போது ஏ.கே. போஸ் ஊழல் நடவடிக்கைளிலும் ஈடுபட்டார். இல்லையென்றால் நான் வெற்றி பெற்றிருப்பேன். எனவே, அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று கோரியிருந்த நான், இரண்டாவது இடம் வந்த என்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட மறந்துவிட்டேன். அதனால் என் தேர்தல் மனுவில் திருத்தம் செய்த புதிய மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று புதிதாக ஒரு மனுவை டாக்டர் சரவணன் 'கடந்த அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 

அவருக்காக மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் வழங்கப்படமால் உள்ளது. தேர்தலில் மோசடி நடந்தது உறுதியாக தெரியவந்தால் மறு தேர்தல் நடத்துவதற்குப் பதிலாக, இரண்டாவதாக வந்த வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவிக்கலாம். அறிவிக்கலாமலும் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகலாம். அந்தவகையில் டாக்டர் சரவணனின் வழக்கில் அதிரடியான தீர்ப்பு வருமோ என்று தி.மு.க-வினர் எதிர்பார்ப்பதால், தி.மு.க தரப்பில் ஆர்ப்பாட்டமில்லாமல் ஆலோசனைக் கூட்டங்களை மட்டும் நடத்திவிட்டு அமைதியாக உள்ளனர்.

இதுபற்றி தி.மு.க. முக்கிய நிர்வாகிகளிடம் பேசியபோது, ''தேர்தல் முறையாக நடந்தால் எங்கள் கட்சி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது. தினகரன் அணியினர் வாக்குகளை பிரிப்பதாலும், அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை நான்கு கோஷ்டிகளாக பிரிந்து கிடப்பதாலும் தி.மு.க-வுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ளது. அ.தி.மு.க-வினர் வெளியில் ஆக்டிவாக காட்டிக்கொண்டாலும், திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடக்கக் கூடாது என்பதுதான் அவர்களின் எண்ணம். எப்படியிருப்பினும்  சரவணனின் வழக்கில் தீர்ப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம்'' என்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்