`வீழ்ந்த தென்னைமரங்களைப் போலவே விவசாயிகளின் வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது!’ - வைரமுத்து | Vairamuthu speaks about Gaja relief works

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (09/12/2018)

கடைசி தொடர்பு:16:30 (09/12/2018)

`வீழ்ந்த தென்னைமரங்களைப் போலவே விவசாயிகளின் வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது!’ - வைரமுத்து

தமிழக அரசு மேற்கொண்டு வரும் கஜா புயல் மீட்பு நடவடிக்கை போதுமானதாக இல்லை என கவிஞர் வைரமுத்து குற்றம்சாட்டியிருக்கிறார். 

வைரமுத்து


நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை மொத்தமாக சிதைத்துப் போட்டிருக்கிறது கஜா புயல். புயலில் பாதிப்புகளால் 63 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 3 லட்சத்துக்கும் மேற்பட்ட  வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 12,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்திருக்கின்றன. 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்திருக்கின்றன. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக் கரம் நீட்டி வருகிறார்கள். அதேபோல், அரசு தரப்பிலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. 

வைரமுத்து


இந்தநிலையில், அரசின் மீட்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டை கவிஞர் வைரமுத்து முன்வைத்திருக்கிறார். தஞ்சை வல்லம் பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வைரமுத்து, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆடுகளை வழங்கினார். அங்கு பேசிய வைரமுத்து புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வருவோம் என்று சவால்விட்டு செயல்படுங்கள் என மக்களுக்கு அறிவுறுத்தினார். சென்னை வளசரவாக்கத்தில் உணவகம் திறக்கும் நிகழ்ச்சியில் இன்று கலந்துகொண்ட வைரமுத்து செய்தியாளர்களிடம் பேசினார். 

வைரமுத்து


அவர் கூறுகையில், ``தரையில் விழுந்து கிடக்கிற தென்னைமரங்கள் அகற்றப்படவில்லை; நிமிர்த்தப்படவில்லை.சிதைந்துபோயிருக்கிற வீடுகளுக்குக் கூரைகள் இல்லை. தென்னைமரங்களைப் போலவே தமிழர்களும் ஒரு பெரிய அச்சத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வு மீட்கப்பட வேண்டும் என்றால், மீட்புப் பணிகள் விரைந்து செயலாற்றப்பட வேண்டும் என்பது என் எண்ணம்’’ என்றார். மேலும், விவசாயிகளின் வாழ்வும் வீழ்ந்துகிடக்கும் தென்னைமரங்களைப் போலவே பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.