`மேக்கேதாட்டூ அணையால் தமிழகத்துக்குத்தான் அதிக பயன்!' - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் | Karanataka Minister Shivakumar Speaks about Mekedatu dam

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (09/12/2018)

கடைசி தொடர்பு:17:37 (09/12/2018)

`மேக்கேதாட்டூ அணையால் தமிழகத்துக்குத்தான் அதிக பயன்!' - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார்

மேக்கேதாட்டூ அணையால் கர்நாடகாவை விட தமிழகத்துக்குத்தான் அதிக பயன் கிடைக்கும் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கருத்துத் தெரிவித்திருக்கிறார். 

கர்நாடக அமைச்சர் சிவக்குமார்

காவிரியின் குறுக்கே மேக்கே தாட்டூவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராகத் தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அணை கட்டும் முடிவு இருப்பதாகக் கூறி கர்நாடக அரசுக்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறது. மேக்கேதாட்டூ அணைக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணிக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுதி அளித்திருக்கிறது.

மேக்கேதாட்டூ

அதேபோல், கர்நாடகாவுக்கு அனுமதி அளித்த நீர்வள ஆணையத்தின் தலைவரே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்காலத் தலைவராகப் பதவி வகிக்கிறார். இது பொருத்தமற்றது. எனவே, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு சுதந்திரமாகச் செயல்படும் புதிய நிரந்தரத் தலைவரை நியமிக்க வேண்டும் என்று கூறி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறது. மேக்கேதாட்டூவில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். இதன்மூலம், கர்நாடக அரசு மேக்கேதாட்டூ அணை கட்டுவதற்கான பணிகளை அதிகாரபூர்வமாகத் தொடங்கியிருக்கிறது.   

இந்தநிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார், ``மேக்கேதாட்டூவில் அணைகட்டுவதன் மூலம் 67 டி.எம்.சி தண்ணீரைச் சேமிக்க முடியும். இதனால், தமிழக விவசாயிகள் பயனடைவார்கள். மேக்கேதாட்டூவில் அணைகட்டுவதால் ஏற்படும் நன்மைகளைத் தமிழக அரசு புரிந்துகொள்ளும் என்று நம்புகிறேன். இதுகுறித்து விளக்கமளிக்க தமிழக முதலமைச்சரிடம் நேரம் கேட்டுக் கடிதம் அனுப்பியிருக்கிறேன். அதற்கு, இதுவரை பதில் கிடைக்கவில்லை.  தமிழக - கர்நாடக மக்கள் சகோதரர்களைப் போல் பழகி வருகிறோம். நாங்கள் சண்டையிட விரும்பவில்லை.

மேக்கேதாட்டூவில் ஆய்வு

தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல்களை சமாளிக்கவே மேக்கேதாட்டூவில் அணைகட்ட முடிவு செய்திருக்கிறோம். அந்தப் பகுதியில் அணை கட்டுவதால் கர்நாடகாவை விடத் தமிழகத்திற்குத்தான் அதிக பயன் கிடைக்கும். அணை குறித்து ஆய்வு செய்யவே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள எந்தக் கட்சியாக இருந்தாலும், அணைகட்டுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே செயல்படுகிறது.

அ.தி.மு.கவோ அல்லது தி.மு.கவோ எந்தக் கட்சியாக இருந்தாலும் அப்படித்தான் நினைக்கின்றன. மேக்கேதாட்டூ அணையால் தமிழகத்துக்குத் தான் பயன் என்பதைக் கேட்க மறுக்கின்றன. அந்தக் கட்சிகளுக்குள் உட்கட்சிப் பிரச்னை இருக்கலாம். அதனால்தான் அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள் என்று நினைக்கிறேன். அணை கட்டுவதற்கான முழு அனுமதி கிடைத்தபிறகு, நிச்சயம் அதற்கான பணிகளைத் தொடங்குவோம். எங்களது நிலையை நாங்கள் தவறாகப் பயன்படுத்த மாட்டோம்’’ என்றார்.