அமைச்சர் உதயகுமார், அன்வர்ராஜா எம்.பி படங்கள் கிழிப்பு! - பரபரக்கும் ராமநாதபுரம் அ.தி.மு.க | Ramanathapuram: minister Uthayakumar and Anwar Raja MPs pictures torn from flex boards

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (09/12/2018)

கடைசி தொடர்பு:18:30 (09/12/2018)

அமைச்சர் உதயகுமார், அன்வர்ராஜா எம்.பி படங்கள் கிழிப்பு! - பரபரக்கும் ராமநாதபுரம் அ.தி.மு.க

 ராமநாதபுரத்தில் எம்.பி அன்வர்ராஜா இல்ல திருமண விழாவிற்கு வைக்கப்பட்டிருந்த ஃப்ளெக்ஸ் போர்டுகள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.

கிழிக்கப்பட்ட ஃபிளெக்ஸ் போர்டு

ராமநாதபுரம் தொகுதி எம்.பி அன்வர்ராஜா, அ.தி.மு.க சிறுபான்மை பிரிவு செயலாளராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் இருந்து வருகிறார். அ.தி.மு.க-வின் மூத்த அரசியல்வாதியான இவருக்கும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டனுக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. முதல்வர் பங்கேற்கும் முக்கிய நிகழ்வுகளில் மட்டும் இருவரும் அமைதியைக் கடை பிடித்து வரும் நிலையில் மாவட்டத்தில் நிகழும் கட்சி மற்றும் பொது நிகழ்வுகளில் ஒருவரை ஒருவர் மறைமுகமாகத் தாக்கி பேசுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதில், அமைச்சர் மணிகண்டனோ ஒரு படி மேலே சென்று அன்வர்ராஜாவை நேரடியாகவே வம்புக்கு இழுத்த நிகழ்வுகளும் அடங்கும்.

கிழிக்கப்பட்ட ஃபிளெக்ஸ் போர்டு

இந்நிலையில் அன்வர்ராஜாவின் இல்லத் திருமண விழா ராமநாதபுரத்தில் இன்று நடந்தது. இதையொட்டி முதல்வர் மற்றும் துணை முதல்வர் படங்களுடன்  இந்த விழாவில் பங்கேற்க வரும் அமைச்சர்கள் சிலரது புகைப்படத்துடன் கூடிய வரவேற்பு ஃப்ளெக்ஸ் போர்டுகளை அன்வர்ராஜா ராமநாதபுரம் நகரில் வைத்திருந்தார். ஆனால் உள்ளூர் அமைச்சரான மணிகண்டனின் படமோ, பெயரோ இந்த போர்டுகளில் இடம் பெறவில்லை.  அன்வர்ராஜா வைத்திருந்த திருமண விழா வரவேற்பு போர்டுகளில் உள்ள அமைச்சர் உதயகுமார், முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க அமைப்பு செயலாளருமான ராஜகண்ணப்பன் மற்றும் அன்வர்ராஜா ஆகியோரது படங்களை விஷமிகள் சிலர் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் ஆளும் கட்சி எம்.பி வைத்திருந்த போர்டுகள் கிழித்து சேதபடுத்தப்பட்ட சம்பவம் ராமநாதபுரம் அ.தி.மு.க-வினுள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.