வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (09/12/2018)

கடைசி தொடர்பு:07:20 (10/12/2018)

ஆளுங்கட்சிப் பிரமுகர்களால் மாற்றப்பட்ட கமிஷனர் - போராட்டம் நடத்தும் குன்னூர் மக்கள்!

குன்னூர் நகராட்சி கமிஷனர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

சரஸ்வதி

குன்னூர் நகராட்சி கமிஷனராக இருந்தவர் சரஸ்வதி. கமிஷனராக சார்ஜ் எடுத்த சில நாள்களிலேயே, நகராட்சிக்குச் சொந்தமான பேருந்துநிலையத்தில் உள்வாடகைக்கு விட்ட கடைகளை மீண்டும் நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். குறிப்பாக, நீண்ட ஆண்டுகளாக இருக்கும் குன்னூர் மார்க்கெட் பிரச்னையில் தீர்வு கொண்டு வருவதற்கும் சரஸ்வதி தீவிர முயற்சியில் ஈடுபட்டுவந்தார்.

குறுகிய காலத்தில் இத்தனை அதிரடிகளைச் செய்த சரஸ்வதிக்குப் பொதுமக்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், ஆளுங்கட்சி பிரமுகர்கள் இதை அவ்வளவாக ரசிக்கவில்லை. இந்த நிலையில், அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் யோகேஷ் என்பவர், விதிமுறைகளை மீறி அப்பார்ட்மென்ட் கட்டி வந்துள்ளார். இதையடுத்து, அந்தக் கட்டடத்துக்கு கடந்த 6-ம் தேதி சரஸ்வதி சீல் வைத்துள்ளார்.

குன்னூரில் வேலுமணி

இதில், ஆத்திரமடைந்த ஆளுங்கட்சி பிரமுகர்கள், சரஸ்வதியின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் வேலுமணியிடம் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், சரஸ்வதியை பணியிட மாற்றம் செய்யவேண்டுமென்றும் கூறியிருக்கிறார்கள். இதனால், தற்போது சரஸ்வதி வேலூர் மாநகராட்சியின் உதவி கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மிகவும், துணிச்சலுடனும், நேர்மையாகவும் பணியாற்றிய சரஸ்வதியை பணியிட மாற்றம் செய்ததற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. சரஸ்வதிக்கு ஆதரவாகச் சமூக வலைதளங்களில் பதிவுகள் பரவிவந்தன. இந்த நிலையில், சரஸ்வதி பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குன்னூரில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் வருகின்ற 12-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.