வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (09/12/2018)

கடைசி தொடர்பு:07:24 (10/12/2018)

புதுக்கோட்டை அருகே டாஸ்மாக் மேலாளரை அரிவாளால் வெட்டி 16 லட்ச ரூபாய் கொள்ளை!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே டாஸ்மாக் கடை சூப்பர்வைசரை  மர்ம நபர்கள்  அரிவாளால் வெட்டி ரூ.16.60 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தோப்பு வயல் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்தக் கடையில் பல லட்சம் மதிப்பிலான சரக்குகள் தினமும் விற்பனையாவதாகக் கூறப்படுகிறது. இங்கு ஆ.குடிக்காட்டைச் சேர்ந்த கண்ணன் (35) சூப்பர்வைசராகப் பணிபுரிந்து வருகிறது. மேலும், கண்ணனின் சகோதரர் செந்தில்குமார் மற்றும் நவக்குடியைச் சேர்ந்த காளிதாஸ் ஆகியோர் சோல்ஸ்மேன்களாக உள்ளனர். தினமும் வசூலாகும் பணத்தை கண்ணன் பைக்கில் வீட்டுக்கு எடுத்துச் செல்வது வழக்கம். வழக்கம்போல், கடையில் வசூலான பணம் ரூ.18,87,300 பணத்தை ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு, கண்ணன், செந்தில்குமார் ஒரு பைக்கிலும், காளிதாஸ் மற்றொரு பைக்கிலும் சென்றனர்.

டாஸ்மாக்

இவர்களை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 4 பேர் பின் தொடர்ந்தனர். கடையை  விட்டு சிறிது தூரம் சென்றபோது, 4 பேரில் ஒருவன் போதையில் தடுமாறி விழுவதுபோல் விழுந்திருக்கிறார். இதைப்பார்த்த கண்ணன், செந்தில்குமார், காளிதாஸ் ஆகியோர் அவரைத் தூக்க முயற்சி செய்தனர். அப்போது, மற்ற 3 பேரும் கண்ணனிடம் இருந்த பணப்பையைப் பறிக்க முயன்றனர். உடனே, சுதாரித்த கண்ணன் அவர்களிடம் இருந்து தப்பிக்க எண்ணி டாஸ்மாக் கடையை நோக்கி ஓடினார். கண்ணனைத் துரத்தி ஓடினர். அதில், ஒருவர் கண்ணனின் கால் மற்றும் உடம்பு பகுதியில் அரிவாளால் வெட்டியிருக்கிறார். இதில், கண்ணன் தடுமாறி கீழே விழுந்தார். பணப்பையும் கீழே விழுந்து பணம் சிதறியது. பையில் இருந்த  ரூ.16,60,150 பணத்தை மர்ம நபர்கள் எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். சிதறிக் கிடந்த ரூ.2,27150 பணத்தை சேல்ஸ்மேன்கள் சேகரித்தனர். காயமடைந்த கண்ணன் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில், மணமேல்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து  குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.