விமரிசையாக நடந்த திருவானைக்காவல் கோயில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு! | Thousands of pilgrims participate in the Thiruvanaikaval jambukeshwara temple kumbabishekam festival

வெளியிடப்பட்ட நேரம்: 00:45 (10/12/2018)

கடைசி தொடர்பு:07:56 (10/12/2018)

விமரிசையாக நடந்த திருவானைக்காவல் கோயில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள பஞ்சபூத நீர்த்தலமான திருவானைக்காவல் கோயிலில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

அகிலாண்டேஸ்வரி கோயில்பஞ்சபூதங்களில்  நீர் தலமாக திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் போற்றப்படுகிறது. சைவத் திருத்தலங்களில் முக்கிய தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

2,500 வருட பழைமைவாய்ந்த  கோயிலில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட நிதியுதவி மூலம் புனரமைப்பு பணிகள் நடைபெற்றன. தற்போது இந்தக் கோயிலில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு கட்டமாக கோயில் குடமுழுக்கு விழா நடத்தத் திட்டமிடப்பட்டது. அதன்படி  அதன்படி பரிவார தெய்வங்கள் மற்றும் உப சந்நிதிகளுக்கு இன்றும் பெரிய கோபுரங்கள் மூலவர் அம்பாள் சந்நிதி மற்றும் விமானங்களுக்கு 12-ம் தேதியும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

முதல்கட்டமாக இன்று காலை நடைபெற்ற குடமுழுக்கு விழாவுக்காகக் கிழக்கு வாசல் சுந்தரபாண்டியன் கோபுரம் கோயில் மற்றும்  நவராத்திரி மண்டபம் அருகில் யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. பரிவார மூர்த்திகளுக்கு இன்று காலை திட்டமிட்டபடி கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த 6-ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டுத் தொடர்ந்து 7-ம் தேதி நவராத்திரி மண்டபத்தில் பரிவாரமூர்த்திகளுக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கியது. 7-ம் தேதி காலை எட்டரை மணிக்கு யாகசாலையில்  விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம் யஜமானர்கள் சங்கல்பம் நவகிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டன. மாலை 5 மணிக்கு பரிவாரமூர்த்திகள் யாகசாலை பிரவேசம் அஷ்டபந்தனம் சாத்துதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இரவு 8 மணிக்கு மேல் பூர்ணாஹூதி  தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நேற்று காலை 8.30 மணியிலிருந்து பரிவார யாகசாலை பூஜை பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பூஜை புனஸ்காரங்கள் நடந்து வந்த நிலையில், இன்று காலை 6 மணி அளவில் யாகசாலை பூஜைகள் நடந்தது. காலை 7 மணியளவில் யாக சாலையிலிருந்து புனித நீர் கலசங்கள் அர்ச்சகர்களால் சுமந்து வரப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்கியபடி குபேர லிங்கம், காசி விசுவநாதர், விநாயகர், ஆஞ்சநேயர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட 43 உப சந்நிதிகள் மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகள் பரிவார விமானங்கள் உற்சவமூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இந்த விழாவில் காஞ்சி சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், அர்ச்சகர்கள் பரிவார மூர்த்தி விமானங்கள் மற்றும் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

அகிலாண்டேஸ்வரி கோவில் அமைச்சர்கள் நடராஜன், வளர்மதி, சுவாமிநாதன், தம்பிரான், திருவாவடுதுறை ஆதினம் தம்பிரான் திருவிடைமருதூர் கட்டளை, உபயதாரர் மகாலட்சுமி, ரங்கவிலாஸ் ரங்கநாதன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மகாலட்சுமி தீபாராதனையும்  பூர்ணாஹூதி தீபாராதனையும் நடைபெற்றது.

மாலை 4 மணிக்குப் பிரதான மூர்த்தியாகச் சாலை வசதி தொடர்ந்து முதற்கால யாகசாலை பூஜை தொடங்கியது. இந்த நிலையில், வருகிற 12-ம் தேதி நடைபெறும் 2வது கும்பாபிஷேக விழாவில் ராஜகோபுரம், கார்த்திகை கோபுரம், சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட இடங்களுக்கும் மூலவர் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி ஆகியிருக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருவானைக்காவல் கோயில் நிர்வாக அதிகாரி உதவி ஆணையர் ஜெயப்பிரியா ஆகியோர் தலைமையில் கோயில் உபயதாரர்கள் பக்தர்கள் உள்ளிட்டவர்கள்  விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள். இவ்விழாவை முன்னிட்டு திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க