வெளியிடப்பட்ட நேரம்: 02:11 (10/12/2018)

கடைசி தொடர்பு:08:09 (10/12/2018)

ஒரே பள்ளியில் இரண்டாவது முறையாக திருடப்பட்ட வினாத்தாள் - இது சிவகங்கை அவலம்

தேவகோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின்  பூட்டை உடைத்து வினாத்தாள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இயங்கி வரும் பள்ளியில் அரையாண்டுத் தேர்வுக்கான 9,10,11,12-ம் வகுப்புக்கான வினாத்தாள் 7-ம் தேதி தலைமை ஆசிரியர் அறைக்குப் பக்கத்து அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இன்று அமெரிக்கா வாழ் தமிழர்கள் மருத்துவ முகாம் இதே பள்ளியில் நடத்தினார்கள். அப்போது பள்ளியின் கதவைத் திறந்து பார்த்தபோது வினாத்தாள் இருக்கும் அறை திறந்து கிடப்பதைப் பார்த்து தலைமை ஆசிரியர் அதிர்ச்சியடைந்து போனார். 

உடனே தேவகோட்டை நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வினாத்தாள் திருடு போன சம்பவம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் வரை சென்றது. இதையறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் துணைக்கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே பள்ளியில் இரண்டாம் பருவத்தேர்வு வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியானது.

இதையறிந்த மாவட்ட கல்வித் துறை வினாத்தாள்கள் அனைத்தும் தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் மெயில் அனுப்பப்பட்டது. அரையாண்டு தேர்வுக்கான கேள்வித் தாள்களை பயன்படுத்த முடிவு எடுத்த கல்வித்துறை பெரும் குழப்பம் அடைந்தது. அதன் பிறகு மீண்டும் அதே பருவத் தேர்வு வினாத்தாளைக் கொண்டு தேர்வு நடத்தப்படும் என்று கல்வித்துறையில் இருந்து பள்ளிகளுக்கு மெயில் அனுப்பப்பட்டது. 

இப்படியொரு குழப்பத்தில் இருந்த பள்ளியில் மீண்டும் அரையாண்டுத் தேர்வுக்கான கேள்வித்தாள் திருடு போயிருக்கிறது. இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பள்ளியில் உள்ளவர்கள் யாரோ ஒருவர்தான் இந்தச் செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும். திருடப்பட்ட அறையின் பூட்டு ஸ்குரு ட்ரைவர் வைத்துக் கழற்றப்பட்டிருக்கிறது. எனவே, திருடன் உள்ளுக்குள் இருக்கும் ஒருவராகத்தான் இருக்க முடியும் என்கிற  கோணத்திலும் போலீஸாரின் விசாரணை போய்க்கொண்டிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க