`போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை!’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம் | we are not able to achieve globaly for linsufficient specilities and training says olympic winner karnam malleswari

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (10/12/2018)

கடைசி தொடர்பு:08:32 (10/12/2018)

`போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை!’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்

ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் சார்பில் ‘ஈஷா கிராமோத்சவம்’ என்னும் பிரமாண்டமான விளையாட்டுப் போட்டி ஈரோடு டெஸ்வேலியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பளு தூக்குதலில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற கர்ணம் மல்லேஸ்வரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு முன்னதாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுடன், கர்ணம் மல்லேஸ்வரி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

கர்ணம் மல்லேஸ்வரி

ஒலிம்பிக் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி பேசுகையில், ``தமிழக கிராமங்களில் விளையாட்டை மேம்படுத்த ஈஷா எடுத்துள்ள இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. கிராமப்புறங்களில் இருந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளதால், இது மாதிரியான விளையாட்டுப் பயிற்சிகள் அவர்களை ஊக்குவிக்கும். விளையாட்டுத் துறையில் பெண்கள், ஆண்கள் என்ற எந்த பேதமும் இல்லை. இருபாலருக்கும் விளையாட்டுத் துறையில் ஒரே மாதிரியான பிரச்னைகள் தான் இருந்து வருகின்றன. உடற்பயிற்சி மையங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால்தான், முறையான பயிற்சி பெற்று உலக அளவில் சாதிக்க முடியாத நிலை நிலவுகிறது. இந்தியாவில் திறமையான வீரர்கள் நிறைய இருக்கின்றனர்.

கர்ணம் மல்லேஸ்வரி

அவர்களுக்கு போதுமான வசதிகளைச் செய்து கொடுத்தால், நிச்சயமாக அவர்களால் உலக அளவில் சாதிக்க முடியும். ஒரு விளையாட்டு வீரருக்கு உணவு மற்றும் பயிற்சிகளுக்கான செலவு என மாதத்துக்கு குறைந்தபட்சம் ரூ.6,000 வரை செலவாகிறது. இதற்கு அரசாங்கமும், தனியார் அமைப்புகளும் உதவ முன்வர வேண்டும். 1990-களில் பளு தூக்குதல் போட்டியில் தமிழகம் சிறந்து விளங்கியது. அந்த நிலை மீண்டும் உருவாக வேண்டும். இந்தியாவில் போதிய விளையாட்டு மேம்பாட்டு வசதிகளையும், சிறந்த பயிற்சிகளையும் உருவாக்க வேண்டும். ஈஷா சார்பில் தொடங்கவுள்ள விளையாட்டு அகாடமியில் பளு தூக்குதல், குத்துச்சண்டை மற்றும் மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளதற்கு என்னால் முடிந்த ஒத்துழைப்பை நிச்சயமாக வழங்குவேன்” என்றார்