வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (10/12/2018)

கடைசி தொடர்பு:08:40 (10/12/2018)

திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது!

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த வங்கதேச நாட்டினர் 2 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

கைது

திருப்பூர் மாவட்டம் சிறுபூலுவப்பட்டி பகுதியில் வங்கதேச நாட்டினர் சிலர் எந்தவித உரிய ஆவணங்களும் இல்லாமல் தங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்திருக்கிறது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியில் சோதனையை மேற்கொள்ளத் தொடங்கினார்கள் காவல்துறையினர். இச்சோதனையில் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த சபுஷ் மற்றும் அப்துல் ரஷிஷ் ஆகிய இருவர் முறையான பாஸ்போர்ட் மற்றும் விசா ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக திருப்பூரில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும், சம்பந்தப்பட்ட சபுஷ் பங்களாதேஷ் நாட்டின் டாக்கா நகரத்தைச் சேர்ந்தவர் என்றும், அப்துல் ரஷிஷ் என்பவர் சாத்பூர் தானா பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவ்விருவரும் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் கடந்த ஆண்டு இந்தியாவுக்குள் நுழைந்து, கர்நாடக மாநிலம் பெங்களூரில் சில நாள்களும், அதன்பிறகு  சேலம், ஈரோடு மற்றும் பெருந்துறை ஆகிய பகுதிகளில் சில மாதங்களும் வேலை செய்துவிட்டு பின்னர் திருப்பூர் வந்து சேர்ந்திருக்கிறார்கள். தற்போது இருவரும் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இவர்கள் மட்டும்தானா அல்லது இன்னும் அதிகளவு வங்கதேச ஆட்கள் திருப்பூரில் தங்கி இருக்கிறார்களா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள்.