``சோனியா காந்தியால் தமிழக அரசியல் சூடு பிடிக்கும்!" - திருமாவளவன் கருத்து | Thirumavalavan says about tamilnadu politics

வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (10/12/2018)

கடைசி தொடர்பு:09:15 (10/12/2018)

``சோனியா காந்தியால் தமிழக அரசியல் சூடு பிடிக்கும்!" - திருமாவளவன் கருத்து

``சோனியா காந்தியால் தமிழக அரசியல் சூடு பிடிக்கும்” என விடுதலைக் கட்சிகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தாயாரின் 16-ம் நாள் துக்க நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்தார் விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன். அப்போது அவரைச் சந்தித்த செய்தியாளர்களிடம், ``சென்னை அண்ணா அறிவாலயத்தில் வருகின்ற 16-ம் தேதி தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியின் திருவுருவச் சிலை திறக்கும் நிகழ்வுக்கு விடுதலைச் சிறுத்தைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் தருணம்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி விழாவில் கலந்துகொண்டு சிலையை திறந்து வைக்க இருக்கிறார். தமிழகத்தில் தி.மு.க, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை உள்ளடக்கிய தோழமைக் கட்சிகள் இணைந்த அணி வலுவடைந்து வருவது சனாதன சக்திகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. எனவேதான் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே விரிசலை ஏற்படுத்துவதற்கான பயங்கர முயற்சிகளைச் சனாதன சக்திகள் எடுத்து வருகின்றனர். அதனடிப்படையில்தான் அண்மையில் ஒரு தலித் இளைஞர் எழுப்பிய முழக்கத்தை விடுதலைச் சிறுத்தைகளோடு இணைத்துப் பேசி திரித்து வருகின்றனர்.

திருமா வளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் தான் பல சமூகத்தை சார்ந்தவர்களுக்கு எதிராக முழக்கத்தை எழுப்பியிருக்கிறார் என்று பா.ஜ.க-வைச் சேர்ந்த ஹெச்.ராஜாவும், பா.ம.க-வைச் சேர்ந்தவர்களும் வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருகின்றனர். இது தி.மு.க கூட்டணியில் திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்துவதால் அவர்கள் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அவதூறு வழக்கு தொடரப்படும். கருணாநிதியின் திருஉருவச் சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி கலந்துகொள்ளும்போது தமிழக அரசியல் மிகவும் தீவிரமாக சூடுபிடிக்கத் தொடங்கும். எங்களின் இந்த அணி மேலும் வலுவடையும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க