வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (10/12/2018)

கடைசி தொடர்பு:12:25 (10/12/2018)

7 பேர் விடுதலைக்கு மத்திய அரசு ஆதரவு? - பாதிக்கப்பட்டோரின் ரிட் மனுவுக்கு எதிராக புதிய மனு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள ரிட் மனுவுக்கு எதிராக மத்திய அரசு புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரை செய்யலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், அந்தக் கடிதம் தொடர்பாக இதுவரை ஆளுநர் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் விளக்கமும் வழங்கப்படவில்லை.

ஏழு பேர் விடுதலையை வலியுறுத்தியும், இந்த விவகாரத்தில் ஆளுநர் விரைந்து முடிவு தெரிவிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதே கோரிக்கையை முன்வைத்து தமிழகத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகம் உட்பட உலக நாடுகளில் இருந்தும் ஏழு பேர் விடுதலையை வலியுறுத்தி ஆளுநருக்குத் தொடர்ந்து கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், ஏழு பேர் விடுதலைக்கு எதிராக அப்பாஸ் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை காலாவதியான மனுவாக அறிவிக்கக்கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளது. கடந்த வாரம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது மேக்கே தாட்டூ அணை, கஜா புயல், ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு அனைவரின் கவனத்தைப் பெற்றுள்ளது. 

மத்திய அரசின் மனுவுக்குப் பிறகு ஆளுநர் இனியும் காலம் தாழ்த்த முடியாது என்றும் இதனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஏழு பேரின் விடுதலை எந்த நேரமும் முடிவுக்கு வரலாம் எனக் கூறப்படுகிறது.