`பெங்களூரு டீம் கடத்திவிட்டது; நான் பேசமுடியாத இடத்தில் இருக்கேன்!'‍ -`பவர்ஸ்டார்' சீனிவாசன் | power star shares about the controversies

வெளியிடப்பட்ட நேரம்: 12:06 (10/12/2018)

கடைசி தொடர்பு:15:40 (10/12/2018)

`பெங்களூரு டீம் கடத்திவிட்டது; நான் பேசமுடியாத இடத்தில் இருக்கேன்!'‍ -`பவர்ஸ்டார்' சீனிவாசன்

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன்

பணத்தகராறு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது பெங்களூரைச் சேர்ந்த ஒரு டீம் என்னை அடியாட்களை வைத்து சென்னையிலிருந்து ஊட்டிக்குக் கடத்திவிட்டது என்று நடிகர் `பவர்ஸ்டார்' சீனிவாசன் தெரிவித்தார். 

கோலிவுட்டில் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத நடிகர் `பவர் ஸ்டார்' சீனிவாசன். இவர், சென்னை அண்ணாநகரில் குடியிருந்துவருகிறார். சில தினங்களுக்கு முன் நடிகர் சீனிவாசன் கடத்தப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனால், அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.   போலீஸாரும் நடிகர் சீனிவாசனைத் தேடினர். அவரின் செல்போன் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில், நடிகர் சீனிவாசன் ஊட்டியில் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதனால், போலீஸாரும் அவரின் குடும்பத்தினரும் நிம்மதியடைந்தனர். நடிகர் சீனிவாசனைத் தேடி அவரின் மனைவி ஜூலி ஊட்டிக்குச் சென்றார். அதன்பிறகு அவரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை என்று ஜூலியின் சகோதரி அனிதா மேரி தெரிவித்தார். நடிகர் சீனிவாசனைத் தொடர்ந்து ஜூலியும் மாயம் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இருவரும் ஊட்டியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மகள் வைஷ்ணவி

`பவர் ஸ்டார்' சீனிவாசனின் மகள் வைஷ்ணவி கூறுகையில், ``என்னுடைய அம்மாவுக்கு போன் செய்தவர்கள், அப்பாவைக் கடத்திவிட்டதாகக் கூறினர். பிறகு குறிப்பிட்ட இடத்துக்கு அவரை வரச் சொன்னார்கள். தற்போது அப்பாவும் அம்மாவும் ஊட்டியில் இருப்பதாக எங்களுக்குக் தகவல் கிடைத்துள்ளது" என்றார். 

இதுகுறித்து நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை செல்போனில் தொடர்பு கொண்டோம். ``என்னைக் கடத்தியது உண்மை. என் மனைவியுடன் ஊட்டியில் இருக்கிறேன். பெங்களூரைச் சேர்ந்த ஒருவருக்கும் எனக்கும் பணக் கொடுக்கல் பிரச்னை இருந்துவருகிறது. அதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதற்குள் என்னை பெங்களூரு டீம் கடத்திவிட்டது. நான் பேச முடியாத இடத்தில் இருக்கிறேன். நடந்த சம்பவத்தை முழுமையாக உங்களிடம் தெரிவிக்கிறேன்" என்று இணைப்பைத் துண்டித்துவிட்டார். 

ஜூலியின் சகோதரி அனிதா மேரியிடம் பேசினோம். ``என்னுடைய சகோதரி ஜூலியையும் காணவில்லை. தற்போது ஜூலி ஊட்டியில் இருக்கும் தகவல் எங்களுக்குக் கிடைத்துவிட்டது. அவரிடம் போனில் பேசினேன். எங்களைக் கடத்தியவர்களை போலீஸார் கைது செய்துவிட்டார்கள் என்று தெரிவித்தார். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதன்பிறகே பவர் ஸ்டார் சீனிவாசன், அவரின் மனைவி கடத்தலுக்கான காரணம் தெரியவரும். சென்னைக்கு அவர் வந்தபிறகு நடந்த சம்பவத்தை அவரே உங்களிடம் தெரிவிப்பார்" என்றார். 

 நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்

`பவர் ஸ்டார்' சீனிவாசன் கடத்தல் குறித்து போலீஸார் கூறுகையில், ``தமிழக, டெல்லி போலீஸில் `பவர் ஸ்டார்' சீனிவாசன் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைது செய்யப்பட்ட அவர் ஜாமீனில் வெளியில் இருந்துவந்தார். வழக்கு விசாரணை நீதிமன்றங்களில் நடந்துவருகின்றன. இந்தச் சூழ்நிலையில்தான் `பவர் ஸ்டார்' சீனிவாசனைக் கடத்திவிட்டதாக அவரின் மனைவி ஜூலி புகார் கொடுத்தார். விசாரித்தபோது பணத்தகராறில் அவர் கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தது. அவரிடமே நாங்கள் போனில் பேசினோம். அப்போது அவர் நலமாக இருப்பதாகத் தெரிவித்தார். இதனால் ஜூலி கொடுத்த புகாரை முடித்துவைத்துவிட்டோம்" என்றனர். 

சீனிவாசன் அவரின் மனைவி ஜூலி ஆகியோர் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானதால் சென்னை போலீஸார் துரிதமாக செயல்பட்டு விசாரித்தனர். அப்போது அவர்கள் இருப்பிடம் தெரியவந்ததும் போலீஸார் அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். பவர் ஸ்டார் சீனிவாசனின் குடும்பத்தினர் கூறிய கடத்தல் புகார் சென்னை போலீஸாரை முதலில் திக்குமுக்காட வைத்துவிட்டது.