`உங்கள நாங்க பந்திக்கு கூப்பிட்டோமா?' - தங்க தமிழச்செல்வனை கிண்டலடித்த ஜெயக்குமார் | TN Minister jayakumar criticise AMMK party member thangathamilselvan

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (10/12/2018)

கடைசி தொடர்பு:14:00 (10/12/2018)

`உங்கள நாங்க பந்திக்கு கூப்பிட்டோமா?' - தங்க தமிழச்செல்வனை கிண்டலடித்த ஜெயக்குமார்

தமிழகம்தான் அல்வாவுக்குப் பெயர்பெற்றது. மேக்கே தாட்டூ அணி விவகாரத்தில் கர்நாடகா எங்களுக்கு அல்வா தர முயற்சி செய்ய வேண்டாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் ஜெயகுமார்

ராஜாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பாரிமுனையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் இன்று அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் ஜெயக்குமார், ``உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டு ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநருக்கு எந்த நிர்பந்தமும் நாங்கள் தர முடியாது. இந்த விவகாரத்தில் விரைவில் ஆளுநர் ஒரு நல்ல முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ராஜிவ் காந்தி கொலை வழக்கு

ஜெயலலிதாவை, தி.மு.க-வின் கனிமொழி பாராட்டியதற்கு நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதையே ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது கூறியிருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். பரவாயில்லை இறந்த பிறகாவது கூறினார்களே மிகவும் நன்றி. அரசியலைப் பொறுத்தவரை ஆண் ஆதிக்கம் எனத் தனியாக இல்லை. மக்களின் மனநிலையைப் பற்றி அறிந்துகொண்டு அதற்கு முன்னதாக செயல்படுபவர்களே சிறந்த அரசியல் தலைவர் ஆகிறார்கள். இதில் ஆண், பெண் வேறுபாடு இல்லை. வரலாற்றில் இல்லாத அளவு அ.தி.மு.க எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளனர். எனவே, நம் மாநில நலன் கருதி இங்குள்ள அனைத்து பிரச்னைகள் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் அழுத்தம் தர போதிய அறிவுரைகளை முதல்வர் வழங்கியுள்ளார். எனவே, நிச்சயம் தமிழக விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசப்படும். 

நாடாளுமன்றம்

அ.தி.மு.க, அ.ம.மு.க இணைப்பில், நாங்கள் முதலில் பந்திக்கே கூப்பிடவில்லை. அப்படியிருக்க வாழை இலை கிழிந்திருக்கிறது என்கிறார் தங்க. தமிழ்செல்வன். அவர் அ.தி.மு.க.வுக்கு வரலாம் அவரைச் சார்ந்தவர்கள், கட்சித் தொண்டர்கள் மீண்டும் இங்கு வரலாம். நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலா போன்றவர்கள் அ.தி.மு.க-வில் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அ.தி.மு.க இமயமலை போன்றது. இமயமலை எங்கே? காளான் எங்கே? இமயமலைக்கும் காளான்களுக்கும் வித்தியாசம் உள்ளது. இமயமலையுடன் காளான்கள் இணைந்துவிட முடியுமா? அதுபோலதான் இதுவும். 

தங்க. தமிழ்செல்வன்

தமிழகம்தான் அல்வா தயாரிப்பதில் பிரசித்தி பெற்றது. திருநெல்வேலி அல்வா, மஸ்கோத் அல்வா போன்ற பல அல்வாக்களை நாங்கள் சாப்பிட்டுள்ளோம். தற்போது எங்களுக்கே கர்நாடக அரசு அல்வா கொடுக்கப்பார்க்கிறது. கர்நாடக அமைச்சர் டி.கே சிவக்குமார் சிறுபிள்ளைத்தனமாகப் பேசுகிறார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எங்கள் உரிமை நிலைநாட்டப்படும்” எனப் பேசினார்.