380 டன் எடை பெருமாள் சிலை... திருவண்ணாமலையில் 1 கி.மீ சாலையைக் கடக்க 20 நாள்கள்! | 380-tonne Massive rocks for Bengaluru temple, lorry takes 20 days to cross 1-kilo meter

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (10/12/2018)

கடைசி தொடர்பு:15:28 (10/12/2018)

380 டன் எடை பெருமாள் சிலை... திருவண்ணாமலையில் 1 கி.மீ சாலையைக் கடக்க 20 நாள்கள்!

பெங்களூருவில் உள்ள கோதண்டராம ஸ்வாமி கோயிலில் 380 டன் எடை கொண்ட பெருமாள் சிலை நிறுவப்படவுள்ளது. இதற்காக. திருவண்ணாமலை மாவட்டம், கொரக்கோட்டை கிராமத்தில் கடந்த 2014-ம் ஆண்டு இரு பாறைகள் தேர்வு செய்யப்பட்டன. 380 டன் கல் ஒன்றும், 230 டன் எடை கொண்ட மற்றொரு கல்லும் வெட்டி எடுக்கப்பட்டுச் சிலை வடிவமைக்கும் பணிகள் தொடங்கின. 22 கைகள், 11 முகங்களுடன் விஸ்வரூப பெருமாள் உருவானார். சிலையின் உயரம் 101 முதல் 108 அடி வரை கொண்டதாக அமையும். 

380  டன் எடை கொண்ட சிலை உருவாகியுள்ள ஒரு பாறையை  240 டயர்கள் கொண்ட மிக நீளமான டிரெய்லர் லாரியில் ஏற்றி பெங்களூரு கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டது. பாறை வெட்டி எடுக்கப்பட்ட இடத்திலிருந்து தெள்ளார் என்ற பகுதியில் உள்ள தார் சாலைக்கு லாரி வரவே 20 நாள்கள் ஆகியுள்ளன. இத்தனைக்கும் வெறும் 1 கிலோ மீட்டர் தொலைவுதான். சிலையின் அதிக பாரம் காரணமாக அடிக்கடி லாரியின் டயர்கள் வெடித்தன. மண்சாலை என்பதால் தரையிலும் டயர்கள் பதிந்தன. இதனால், ஒரு கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க 20 நாள்கள் ஆகியுள்ளது. 

தார் சாலையை அடைந்தாலும் சிலையை பெங்களூருக்குக் கொண்டு செல்வது சவால் நிறைந்த பணியாகவே கருதப்படுகிறது. தெள்ளார், பேட்டை, திவனுர், திண்டிவனம், செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம் வழியாகக் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பேட்டை பகுதியில் லாரி கடக்க வேண்டுமென்றால் சாலை ஓரத்தில் உள்ள கடைகள், வீடுகளை அகற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சிலை தனியார் கோயிலுக்குக் கொண்டு செல்வதால் வீடுகளை, கடைகளை அகற்றப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசு அதிகாரிகள் , போலீஸார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.  பேட்டை பகுதியை இன்று பெருமாள் சிலை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மலை

பெங்களூரு கோதண்டராமசாமி கோயில் நிர்வாகி சதானந்தன் கூறுகையில், ``ஒரே கல்லில்தான் சிலை அமைக்கக் கல் தேடினோம். கிடைக்காத காரணத்தினால் இருபாறைகள் வெட்டி எடுத்துள்ளோம். இந்த பெருமாள் சிலை நிறுவப்பட்டால், பிரமாண்டமானச் சிலையாக அமையும்'' என்கிறார். 

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தக் கற்களை பெங்களூருக்குக் கொண்டு செல்ல முயன்றனர். பாறைகளின் அதிக பாரம் காரணமான முயற்சி  வெற்றி பெறவில்லை. பெருமாளுக்கு வந்த சோதனை தீர வேண்டுமென்று பக்தர்கள் வேண்டிக் கொண்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க