லீவு கொடுக்காத பெண் இன்ஸ்பெக்டர்! - விரக்தியில் உயிரை மாய்க்க முயன்ற காவலர் | a police tried to suicide inside the police station in nellai

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (10/12/2018)

கடைசி தொடர்பு:15:00 (10/12/2018)

லீவு கொடுக்காத பெண் இன்ஸ்பெக்டர்! - விரக்தியில் உயிரை மாய்க்க முயன்ற காவலர்

நெல்லை மாவட்டம், நாங்குநேரி காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர், விடுப்புக் கிடைக்காத மன  அழுத்தத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவலர் வெங்கடேசன்

நெல்லை மாவட்டம், நாங்குநேரி காவல்நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் வெங்கடேசன். சிவகிரியைச் சேர்ந்த அவர், நாங்குநேரியில் தங்கியிருந்து பணியாற்றி வருகிறார். அவரின் சகோதரியின் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிக்காக மூன்று நாள்கள் விடுப்புக் கேட்டுள்ளார். கடந்த இரு தினங்களாகவே, அந்த ஸ்டேஷனின் பெண் இன்ஸ்பெக்டரிடம் அவர் விடுப்புக் கேட்டு வந்துள்ளார். ஆனால், அவருக்கு விடுப்புக் கொடுக்காமல் இன்ஸ்பெக்டர் இழுத்தடித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று அவர் மீண்டும் இன்ஸ்பெக்டரிடம் சென்று விடுப்புக் கேட்டிருக்கிறார். வழக்கம்போல அதைக் கண்டுகொள்ளாத இன்ஸ்பெக்டர், அவரை கடுமையாகத் திட்டியதுடன் அறையைவிட்டு வெளியே செல்லுமாறு அவமதித்துள்ளார். அதனால் மன உளைச்சலில் வெங்கடேசன் இருந்த நிலையில், அவரை அழைத்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், ஸ்டேஷனில் இருக்கும் டியூப் லைட்டுகளைக் கழற்றி அவற்றைச் சுத்தப்படுத்துமாறு தெரிவித்துள்ளார்.

லீவு கிடைக்காததால் மன அழுத்தத்தில் இருந்த வெங்கடேசன், டியூப் லைட்டைக் கழற்றி தரையில் உடைத்து அதைத் தன் கையில் குத்தியிருக்கிறார். அதனால் கையில் இருந்து ரத்தம் அதிகமாக வெளியேறியிருக்கிறது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக காவலர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறை துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் விசாரணை நடத்தி வருகிறார்.