`15 வருடங்களா அலையுறேன் வேலை கிடைக்கல..!’ - கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற இளைஞர் | youth attempts suicide at Kanchipuram collector office

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (10/12/2018)

கடைசி தொடர்பு:15:20 (10/12/2018)

`15 வருடங்களா அலையுறேன் வேலை கிடைக்கல..!’ - கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற இளைஞர்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தீக்குளிக்க முயற்சி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது பெட்ரோல் கேனுடன் வந்த இளைஞர் தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டார். இதைக் கண்டதும் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர் கையில் இருந்த தீப்பெட்டியைப் பிடுங்கினார்கள். பின்பு அங்கிருந்தவர்கள் அவர் மீது தண்ணீர் ஊற்றினார்கள். தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர் அங்கு வந்தார். அவரிடம் இருந்த மனுவை வாங்கிப் பார்த்தார். அதில் ``நான் கிராம உதவியாளர் பணி வேண்டி 2016-ல் வேலைக்குத் தேர்வாகி இருக்கிறேன். ஆனால், மேலதிகாரிகளால் எனக்கு வேலை கிடைக்கவில்லை. என் தாத்தா ஆங்கிலேயர் காலத்தில் ரூ.2.50-க்கு கிராம முன்சீப்பாக வேலை செய்துவந்தார். 2003-லிருந்து 15 வருடங்களாக வேலை தேடிவருகிறேன். ஆனால், எனக்கு இதுவரை எந்த வேலையும் கிடைக்கவில்லை. இதனால் நானும் என் குடும்பத்தினரும் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆகவே, எனக்குத் தேர்வான வேலையைக் கொடுக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தீக்குளிக்க முயன்ற இளைஞர்

ஆனால், அவர் சொல்லும் தகவல்கள் அனைத்தும் முன்னுக்குப் பின் முரணாக இருந்தது. அவர் எந்தப்பதவிக்கும் தேர்வாகாமலேயே அரசு வேலைக்குத் தேர்வாகிவிட்டதாக தவறாகக் கூறியது மாவட்ட ஆட்சியரின் விசாரணையில் தெரியவந்தது. ``நீங்கள் தேர்வானதற்கான அத்தாட்சி எதுவும் இல்லை. அரசு விதிகளின்படியே வேலை கொடுக்க முடியும். உங்களைப் போன்றவர்களுக்கு வேலை கொடுத்தால், கஷ்டப்பட்டுப் படித்து முடித்து வேலைக்குக் காத்திருக்கும் நிறையபேர் பாதிக்கப்படுவார்கள்” என அறிவுரை வழங்கி அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க