`சித்தப்பா வந்தாங்க, அப்பா தூக்குல கிடந்தாங்க!' - அம்மாவை சிக்கவைத்த மகனின் வாக்குமூலம் | Women caught in police through her son statement

வெளியிடப்பட்ட நேரம்: 16:21 (10/12/2018)

கடைசி தொடர்பு:16:21 (10/12/2018)

`சித்தப்பா வந்தாங்க, அப்பா தூக்குல கிடந்தாங்க!' - அம்மாவை சிக்கவைத்த மகனின் வாக்குமூலம்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, ராஜலிங்கம் (40). இவரது மனைவி சோனியா (27). இவர்களுக்கு ஹரீஸ் (9), சீயா (6) என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜலிங்கம் விவசாய நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவருகின்றார். . 

கொலை செய்த சோனியா கணவருடன்

இவரது மனைவி சோனியாவுக்கு, தங்கையின் கணவன் சிவக்குமாருடன் நீண்ட நாள்கள் தொடர்பு இருந்துவந்துள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ராஜலிங்கம், சிவக்குமார் வீட்டுக்கு வரக்கூடாது சோனியாவிடம் எச்சரித்துள்ளார். இதனால், வீட்டில் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்துள்ளது. ஒரு கட்டத்தில், சிவக்குமாரும், சோனியாவும் ராஜலிங்கத்தை இனியும் விட்டு வைக்கக் கூடாது என்று தீர்த்துக்கட்ட முடிவுசெய்துள்ளனர். 

கடந்த 8-ம் தேதி, சிவக்குமார், சோனியா இருவரும் திட்டமிட்டபடி திருவண்ணாமலையைச் சேர்ந்த சிவக்குமாரின் சகாக்களுடன் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு, 5 பேர் வீட்டுக்கு வந்து மறைந்துகொண்டு, ராஜலிங்கம் வருகைக்காகக் காத்திருந்துள்ளனர். ராஜலிங்கம் வந்ததும், வீட்டுக்கு வெளியே குளித்து முடித்ததும், வீட்டுக்குள் வரும்படி சோனியா கூறியுள்ளார். வீட்டுக்குள் ராஜலிங்கம் நுழைந்ததும் மறைந்திருந்த 5 பேரும், ராஜலிங்கத்தின் வாயைத் துணியால் பொத்தி வீட்டுக்குள் தூக்கிச்சென்று தலையில் தாக்கி, கழுத்தை இறுக்கிக் கொலைசெய்துள்ளனர். இந்தக் கும்பல், கணவர் ராஜலிங்கத்தைக் கொல்லும் வரை வெளியாள்கள் வீட்டுப் பக்கம் வந்துவிடாதபடளவரின் மனைவி சோனியா கண்காணித்திருக்கிறார். 

கொலை

ராஜலிங்கத்தைக் கொன்ற பிறகு, வீட்டின் கூறைக் கம்பியில் தூக்குப்போட்டு, தற்கொலை செய்துகொண்டதுபோல மாட்டிவிட்டுட்டு 5 பேரும் காரில் தப்பிச் சென்றுள்ளனர். அதன் பிறகு சோனியா,  ராஜலிங்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரின் தாயாருக்கு தகவல்கொடுத்துள்ளார். கணவர் ராஜலிங்கம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அழுது நாடகமாடியுள்ளார் சோனியா. இதை நம்பிய ஊராரும் போச்சம்பள்ளி காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். 

ஆனால், ராஜலிங்கத்தின் மரணத்தில் சந்தேகம் அடைந்த போலீஸார், ராஜலிங்கத்தின் மகன் ஹரீஸிடம் விசாரித்துள்ளனர். அப்போது, "வழக்கம்போல அப்பா குளித்துவிட்டு வீட்டுக்குள் வந்தாங்க. பின்னர், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை நடந்தது. அப்போது, 5 பேருடன் எங்க சித்தப்பா வந்தாங்க. பின்னர் எங்க அப்பா தூக்குல கிடந்தாங்க" என்று கூறியுள்ளார். இதை எதிர்பாராத சோனியா வசமாகச் சிக்கியுள்ளார். சோனியாவைக் கைதுசெய்த போலீஸார் சிவக்குமார் உள்ளிட்ட அஜித், பாலாஜி, காளிமுத்து ஆகிய நால்வரைக் கைது செய்துள்ளது. தங்கையின் கணவனுக்காக கணவனைக் கொலைசெய்துள்ள சம்பவம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.