"ஏரியில் டன் கணக்கில் குப்பை; நிலத்தடிநீர் கெட்டுப்போய்விட்டது" : ராசிபுரம் விவசாயிகள் வேதனை | Rasipuram farmers complaints about lake

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (10/12/2018)

கடைசி தொடர்பு:16:50 (10/12/2018)

"ஏரியில் டன் கணக்கில் குப்பை; நிலத்தடிநீர் கெட்டுப்போய்விட்டது" : ராசிபுரம் விவசாயிகள் வேதனை

இந்தியாவுக்கென்று தனிச் சிறப்பு கொண்ட நீண்ட நெடிய வரலாறுகள் பல உண்டு. இந்தியாவில், பல நகரங்கள் நதிகளின் கரைகளில் அமைந்திருப்பதே அதன் சிறப்புகளில் ஒன்று. ஜீவ நதிகள் ஓடிய நாட்டில் இன்று, தூய்மையான நிலத்தடி நீருக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. 


பெருகிவிட்ட தொழிற்சாலைகளில் இருந்து நேரடியாக நிலத்தில் கழிவுகளை விடுவதால், நிலத்தடி நீர் கெட்டுப்போய், இன்று அசுத்தமான தண்ணீரே கிடைக்கிறது. இது ஒருபுறம் இருக்க, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியும் ஏரியில் குப்பையைக் கொட்டிவருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் கெட்டு, சுற்றுப்புற மக்களை, விவசாயிகளைக் கவலையடையச்செய்துள்ளது. 
இந்திய நதிகள், ஆறுகள் தம்மை சுற்றியுள்ள ஏரி, குளங்களை நிரப்பிச் செல்கின்றன. சுத்தமான இந்த நீரால் நிலத்தடி நீர் மட்டம் குறையாமலும், சுத்தமாகவும்யைருந்தது. நிலத்தடி நீரால் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய நீர் தேவைக்குப் பஞ்சம் இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று நீருக்குப் பஞ்சம், அப்படியே கிடைத்தாலும் மாசு என மக்களை கவலைக்குள்ளாகியுள்ளது.
 


 நிலத்தடி நீரில் இரண்டு வகை உண்டு. அவை, மேல் நிலத்தடி நீர், கீழ் நிலத்தடி நீர் எனப்படுகிறது. மேற்புறம் உள்ள நிலத்தடி நீரைக் கிணறுகள், அதிக ஆழமில்லாத ஆழ்துளைக் கிணறுகள் வாயிலாகவும், அதிக ஆழமுள்ள ஆழ்துளைக் கிணறுகள் வாயிலாகக் கீழ் புறம் உள்ள நிலத்தடி நீரை எடுக்கின்றனர். மழைநீர் பூமிக்குள் செல்வதன் மூலம், நிலத்தடி நீர் தக்கவைத்துக்கொள்ளப்படுகிறது. 
மக்களுக்குக் தேவையான நீரை கீழ் நிலத்தடியில் இருந்து பெற்று பூர்த்திசெய்துகொள்கின்றனர். ஆனால் தற்போது, நீர் தேவை அதிகரிப்பின் காரணமாக, கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளைக் கிணறுகள் மூலம் அரசும், மக்களும் எடுக்கத் தொடங்கியுள்ளனர். 

இதனால் நிலத்தடி நீர் மட்டம் விரைவாகக் குறைந்து வந்ததையொட்டி, அதைத் தக்க வைத்துக்கொள்ள கடந்த 2002, 2003ல் கொண்டு வரப்பட்ட மழைநீர் சேகரிப்பு சட்டத்தால் பெருமளவில் மேல் நிலத்தடி நீர் சேகரிக்கப்பட்டுவந்தது. ஆனால், தற்போது இந்தத் திட்டம் அவ்வளவு சுறுசுறுப்பாக இயக்கவில்லை. இதனால், மேல் நிலத்தடி நீரின் மட்டம் வெகுவாகக் குறைந்துவருகிறது. 
 அதிகரித்து வரும் மக்கள்தொகையால், நீருக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலையில் இருக்கிறோம். ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் நகராட்சி நிர்வாகமோ ஏரியில் குப்பையைக் கொட்டி நிலத்தை மாசு ஏற்படச் செய்துவருகிறது.

ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே தண்டான்குட்டை ஏரி உள்ளது. நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளின் குப்பையும் இங்கேதான் கொட்டப்படுகிறது. போதாக்குறைக்கு ஹோட்டல், செஃப்டிக் டேங் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், வீட்டுக் குப்பைகளையும் இங்கேதான் மலைபோல் கொட்டுகின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக இங்கு கொட்டப்பட்டுவருவதால், நிலத்தடி நீர் கெட்டுப்போய்விட்டதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதைப் பொருட்படுத்தாத நகராட்சி நிர்வாகம், தொடர்ந்து அங்கே குப்பையைக் கொட்டிவருகிறது. 
 


இதுபற்றி தண்டான்குட்டை ஏரியைச் சுற்றியுள்ள விவசாயிகளிடம் பேசினோம், ''தினந்தோறும் டன் கணக்கில் குப்பை கொட்டப்படுகிறது. மேலும், அனைத்து இறைச்சிக் கடைகள் மற்றும் எங்கிருந்தோ எடுத்து வரும் செஃப்டிக் டேங் கழிவகளையும் இங்கே கொட்டுகின்றனர். 

 மக்காத பொருள்கள் அதிகம் சேர்ந்து, நிலம் கெட்டுவிட்டது. எங்களுக்குக் கிடைக்கும் தண்ணீர் மாசுடனும், சாக்கடை நாற்றத்துடனும்தான் கிடைக்கிறது. இதையே இன்று வரை குடிக்கிறோம். இதனால் இன்னும் என்ன பிரச்னை ஏற்படுமோ தெரியவில்லை'' என்றனர். 

இதுபற்றி நிறையத் தடவை நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து  ஆர்ப்பாட்டம், சாலை மறியல் செய்துவிட்டோம். அப்போதைக்கு சரிசெய்துவிடுகிறோம் என்று சொல்வார்கள். ஆனால், அதன்பின் முழுமையாகக் குப்பை அகற்றப்பட்டதே இல்லை. இதே நிலை தொடர்ந்தால், பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க