`கோயில் நிலத்தை மீட்டுத்தாருங்கள்!'- தூத்துக்குடியில் தீர்த்தம் தெளிக்கும் நூதனப் போராட்டம் | peoples protest in thoothukudi demand for recover of temples land

வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (10/12/2018)

கடைசி தொடர்பு:17:05 (10/12/2018)

`கோயில் நிலத்தை மீட்டுத்தாருங்கள்!'- தூத்துக்குடியில் தீர்த்தம் தெளிக்கும் நூதனப் போராட்டம்

அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் நெற்றியில் நாமமிட்டு குடத்திலிருந்து தீர்த்தம் தெளிக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம், கயாத்தார் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமம் ஓனமாக்குளம். இந்த கிராமத்தில் 200 ஆண்டுகள் பழைமையான வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கருட சேவை, வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு, புரட்டாசி கருட சேவை ஆகியவை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தக் கோயிலுக்குச் சொந்தமான 20 சென்ட் நிலத்தை அரசு கையகப்படுத்தி உள்ளது. கிணறு, நந்தவனம் இருந்த இந்த நிலத்தை மீண்டும் கோயிலுக்கே ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி பாரதிய கிசான் சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் நெற்றியில் நாமம் போட்டு, கையில் தீர்த்தக்குளம் ஏந்தி மாவிலையால் தீர்த்தம் தெளித்தபடியே ``ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம” என கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் பேசுகையில், ``தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓனமாக்குளம் கிராமத்தில் பழைமையான வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், சித்திரை மாதம் கடைசி சனிக்கிழமை, புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை என வருடத்துக்கு இரண்டு முறை கருட சேவை நடத்தப்படும். அதே போல, மார்கழி திருப்பாவை, வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு ஆகிய திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இக்கோயிலுக்குச் சொந்தமான 20 சென்ட் நிலத்தை அருகில் உள்ள பள்ளியைக் காரணம் காட்டி அரசின் வருவாய்த்துறை ஆக்கிரமித்தது.

கோயில் நிலத்தை மீட்கக் கோரி தீர்த்தம் தெளிக்கும் நூதனப் போராட்டம்

ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் இருந்த கிணறு, நந்தவனம் ஆகியவையும் மூடப்பட்டன. அருகில் உள்ள பிற தனியார் ஆவணங்களில்கூட இந்தக் கோயில் இடங்களை அடையாளம் காட்டி எழுதப்பட்ட வரிகளில்கூட, கோயில் நந்தவனம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பயன்பாடற்று அரசின் வருவாய்த்துறையின் ஆக்கிரமிப்பில் இருக்கும் 20 சென்ட் நிலத்தினை மீண்டும் கோயிலுக்கே அளித்திட வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். அரசு விரைவாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி நெற்றியில் ராம நாமம் இட்டு தீர்த்தக் குடங்களிலிருந்து தீர்த்தம் தெளித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம்” என்றனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ராம கோஷம் போட்டு ஆர்பாட்டம் நடத்திய சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க