தினமும் 150 லாரிகளில் கேரளாவுக்கு மணல் கடத்தல்!- ஓ.பி.எஸ் மகன் மீது நெல்லை கலெக்டரிடம் புகார்! | illegal sand mining in thamirabharani river

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (10/12/2018)

கடைசி தொடர்பு:17:15 (10/12/2018)

தினமும் 150 லாரிகளில் கேரளாவுக்கு மணல் கடத்தல்!- ஓ.பி.எஸ் மகன் மீது நெல்லை கலெக்டரிடம் புகார்!

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மற்றும் உறவினர்கள் சட்ட விரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

மணல் கடத்தல்

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும் விவசாயத் தேவைக்கும் பயன்படும் தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதைத் தடுக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரான நல்லகண்ணு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி மணல் அள்ளுவது தடுத்து நிறுத்தப்பட்டது. கடந்த சில வருடங்களாக மணல் திருட்டு தடுக்கப்பட்ட நிலையில், தற்போது தாமிரபரணி ஆற்றில் மீண்டும் மணல் கொள்ளை நடந்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. 

இது தொடர்பாக பாலாமடை கட்டளை கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான உச்சிமாகாளி என்பவர் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், ``பாலாமடை மற்றும் அதைச் சுற்றிலும் உள்ள கிராமங்களில் விவசாயிகள் வசித்து வருகின்றனர். தாமிரபரணி மற்றும் சிற்றாறு ஆகியவற்றை நம்பியே இப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சீவலப்பேரி அருகில் உள்ள மடத்துப்பட்டி கிராமத்தில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக மணல் திருட்டு நடந்து வருகிறது.

மணல் திருட்டு

ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் வீட்டில் ஓ.பன்னீர்செல்வம், தனது மகன் ரவீந்திரநாத்துக்குப் பெண் எடுத்துள்ளார். அந்த வகையில் ரவீந்திரநாத் மற்றும் அ.தி.மு.க பிரமுகரான அர்பன் ரவி ஆகியோர் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். 4 மணல் அள்ளும் வாகனங்கள் மூலமாகத் தினமும் 150 லாரிகளில் மணல் அள்ளப்பட்டு நாகர்கோவில் வழியாகக் கேரளாவுக்குக் கடத்தப்படுகிறது. கடந்த இரு மாதங்களாக இந்தக் கும்பல் மணல் அள்ளி வந்த போதிலும், அதைக் காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

உச்சிமாகாளிஆற்றில் மணல் அள்ளப்படுவதால் இந்தப் பகுதியின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மணல் அள்ளப்படுவதால் இந்தப் பகுதியில் உள்ள வயல்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் விவசாயத்தைப் பாதியிலேயே நிறுத்தும் நிலை உருவாகியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்தப் பகுதிக்குச் சென்று சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை நிறுத்துமாறு தெரிவித்ததற்கு என்னை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்கள்.

அதனால் விவசாயத்தைப் பாதுகாக்கும் வகையில் தாமிரபரணி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாக மனு அளித்த பின்னர் உச்சிமாகாளி தெரிவித்தார்.   

தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளப்படுவதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியினர் இந்த முறைகேட்டில் ஈடுபடுவதால் புகார் செய்வதற்குக்கூட விவசாயிகளும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், வழக்கறிஞர் உச்சிமாகாளி அளித்துள்ள புகார் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.