வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (10/12/2018)

கடைசி தொடர்பு:17:30 (10/12/2018)

`என் மேஜிக் பார்த்துட்டு சிவகார்த்திகேயன் அண்ணா ஹேப்பி ஆகிட்டார்!' - மேஜிக் மாணவன் மிர்த்திலேஷ்

சிவகார்த்திகேயன்

ஆச்சர்யம் தரும் மேஜிக் கலையைப் பிடிக்காதவர்கள் யாரேனும் இருப்பார்களா? அப்படித்தான் மிர்த்திலேஷுக்கும் மேஜிக் பிடித்தது. அப்படியே, மேஜிக் செய்யவும் கற்றுக்கொண்டான். இப்போது சென்னை, அயனப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயாவில் 7-ம் வகுப்பு படிக்கிறார் மிர்த்திலேஷ். பள்ளியில் மேஜிக் செய்துகொண்டிருந்த மிர்த்திலேஷ், வெளியிடங்களிலும் நிகழ்ச்சி  நடத்திவருகிறார். தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியில், மென்டலிஷம் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கிறார். டி.வி-யில் சுட்டிகளுக்கான நிகழ்ச்சிகளில் தவறாமல் இடம்பிடித்துவருகிறார். சமீபத்தில், 'சீமராஜா' படத்திற்கான நிகழ்ச்சியில், நடிகர் சிவகார்த்திகேயனிடம் மேஜிக் செய்து அசத்தியிருக்கிறார். அதுபற்றி அவரிடம் கேட்டோம். 

சிவகார்த்திகேயன்

"சிவகார்த்திகேயன் அண்ணாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். திடீர்னு ஒருநாள் அம்மா என்கிட்ட, 'சீமராஜா' நிகழ்ச்சிக்காக சிவகார்திகேயன் முன்னாடி நீ மேஜிக் செய்யப்போறேனு சொன்னதுமே சந்தோஷத்துல குதிச்சுட்டேன். நிகழ்ச்சியில், சீட்டுக்கட்டிலிருந்து ஒரு கார்ட்டை எடுத்து மறைச்சு வெச்சிக்க சொன்னேன். அது என்ன கார்டுனு கரெக்டா கண்டுபிடித்ததும் ஆச்சர்யப்பட்டார். அப்பறம், அவர் யார்கூட சேர்ந்து நடிக்க விரும்பறார்னு ஒரு மேஜிக் செய்தேன். ஒரு புத்தகத்தில் நிறைய பெயர்கள் இருக்கும். அதில் ஒரு பெயரை நினைச்சிக்கச் சொன்னேன். அதையும் கரெக்ட்டா கண்டுபிடிச்சதும் செம ஹேப்பியாயிட்டார். அந்த நிகழ்ச்சி டி.வி-யில ஒளிபரப்பானதும், ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம், சிவகார்த்திகேயனைப் பார்த்தியா, பார்த்தியான்னு கேட்டுட்டே இருந்தாங்க" என்று சந்தோஷமான மிர்த்திலேஷ் 'பசங்க 2' படத்திலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.