வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (10/12/2018)

கடைசி தொடர்பு:17:45 (10/12/2018)

`ஸ்டெர்லைட்டை திறக்க முயல்வார்கள்; நாங்க பொறுப்பாக முடியாது!' - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

”ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு உதவுகிறது என்று கூறுவது தவறான குற்றச்சாட்டு. மக்களின் உணர்வுக்கு மதிப்பு அளித்துதான் ஆலையை அரசு மூடியுள்ளது” என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அடிக்கல் நாட்டும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.226.96 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடத்துக்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்துகொண்டு, புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், “மத்திய அரசு ஆண்டுதோறும் தேசிய பேரிடர் பணிக்காக  இரண்டு கட்டமாக நிதி வழங்கிவருகிறது. வழக்கமாக, ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் தேசிய பேரிடர் நிதியை மத்திய அரசு வழங்கும். ஏற்கெனவே, ஜூன் மாதத்திற்கான நிதியை வழங்கிவிட்டது. தற்போது, டிசம்பர் மாதத்திற்கான 2-வது கட்ட நிதியைதான் மத்திய அரசு முன்கூட்டி வழங்கியுள்ளது.

அமைச்சர் உதயகுமார்

இதை, சிலர் தவறுதலாகப் புரிந்துகொண்டு மத்திய அரசு வழங்கிய ரூ.354 கோடி கஜா புயலுக்கு போதாது எனக் கூறிவருகின்றனர். கஜா புயல் பாதிப்பிற்காக மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு இன்னும்  தரவில்லை. புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை  மத்தியக்குழு ஆய்வு செய்து, தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்துள்ளது. எனவே, விரைவில் நல்ல அறிவிப்பு வரும் என நம்புகிறோம். ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு உதவுகிறது என்பது தவறான குற்றச்சாட்டு. ஆலைக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்திவந்த மக்களின் உணர்வுகளை மதித்து, கடந்த 22 ஆண்டுகளாகச் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியுள்ளது.

ஆலைக்கு முதலீடு செய்தவர்கள், ஆலையைத் திறக்க முயற்சிசெய்வார்கள். அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. ஆனால் அரசு, மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்துதான் ஆலையை மூடி உள்ளது. கட்சியை விட்டுப் பிரிந்தவர்கள் மீண்டும் இணையலாம் என முதல்வர், துணை முதல்வர் ஏற்கெனவே அழைப்பு விடுத்துள்ளனர். அவ்வாறு இணைந்தால் அவர்களை வரவேற்போம்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க