கஜா புயல் பாதித்த பகுதிகளில் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு! - அமைச்சர் செங்கோட்டையன் | TN government says go on with Half yearly exams as scheduled

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (10/12/2018)

கடைசி தொடர்பு:18:15 (10/12/2018)

கஜா புயல் பாதித்த பகுதிகளில் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு! - அமைச்சர் செங்கோட்டையன்

கஜா புயல் பாதித்த பகுதிகளில் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். 

பள்ளி மாணவர்கள்

நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. வீடுகள், கால்நடைகள் மற்றும் விவசாயப் பயிர்கள் உள்ளிட்டவற்றை இழந்து மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ளவர்களும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கரம்கொடுத்து வருகிறார்கள். 

கஜா புயல் பாதிப்பு

இந்தநிலையில், கஜா பாதித்த பகுதிகளில் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ``அரையாண்டுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். அரையாண்டுத் தேர்வுக்குப் பின்னர், குறிப்பிட்ட பாடங்களில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் என்பது மாணவர்களின் தகுதியைத் தெரிந்துகொள்வதற்காக நடத்தப்படுபவை. ஆகவே, இந்தத் தேர்வுகளைப் பொறுத்தவரை குறிப்பிட்ட நாளிலேயே நடத்தப்படும்’’ என்றார். 

அமைச்சர் செங்கோட்டையன்

மேலும், கடந்தாண்டு அவசர கதியில் நீட் தேர்வு பயிற்சிகள் நடத்தப்பட்டதால் 4 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றதாகக் கூறிய அவர், ``நடப்பாண்டில் 413 மையங்கள் மூலம் 26,000 மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதனால், தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு அதிகரிக்கும்’’ என்றும் கூறினார்.