வாட்ஸ்அப்பில் பெண்களை விமர்சித்தவர் தலைமறைவு! - வசமாகச் சிக்கிய 3 நண்பர்கள் | Whats app threatning ; three arrested

வெளியிடப்பட்ட நேரம்: 16:56 (10/12/2018)

கடைசி தொடர்பு:16:56 (10/12/2018)

வாட்ஸ்அப்பில் பெண்களை விமர்சித்தவர் தலைமறைவு! - வசமாகச் சிக்கிய 3 நண்பர்கள்

வாட்ஸ்அப்பில் பெண்களை கொச்சைப்படுத்திய வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், முக்கிய நபரைத் தேடி வருகின்றனர்.

அம்பேத்கர் நினைவு தினமான டிசம்பர் 6-ம் தேதி அன்று திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் என்ற கிராமத்தில் அம்பேத்கர் படம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை அன்பழகன் என்பவர் நடத்தினார். அப்போது அவர் மற்ற சமூகத்தைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்வோம் என்றும் காதலிப்போம் என்றும் கலப்புத் திருமணம் செய்வோம் சாதியை ஒழிப்போம் என்றும் வாட்ஸ் அப்பில் செய்தி மற்றும் வீடியோ வெளியிட்டிருந்தார். அந்தச் செய்தி தொடர்பாகச் சம்பந்தப்பட்டவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் உட்பட 9 மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பாமகவினர் புகார் அளித்திருந்தனர். 

அந்தப் புகாரின் பேரில் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸார், நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த சாலமன், அன்புராஜ், வினோத் ஆகிய 3 பேரை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அந்தச் செய்தியை வெளியிட்ட அன்பழகன் என்பவர் தலைமறைவாக இருக்கிறார். தொடர்ந்து போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, ``அம்பேத்கர் படத்தின் முன்னர் நின்றுகொண்டு ஒரு இளைஞன், தலித் அல்லாத சமூகத்தினரைச் சீண்டும் வகையில் பெண்களைக் கொச்சைப்படுத்தும் முழக்கங்களை எழுப்புகிறான். அது மிகவும் இழிவான, முதிர்ச்சியற்ற ஒரு நடவடிக்கையாகும். இதை  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. சமூகப் பதற்றத்தை உருவாக்கும் வகையில் நடந்துகொண்ட அந்த இளைஞனின்மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.