`சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை!' - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு | sasikala no need to appear in egmore court says Madras HC

வெளியிடப்பட்ட நேரம்: 17:29 (10/12/2018)

கடைசி தொடர்பு:17:29 (10/12/2018)

`சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை!' - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் மறு குற்றச்சாட்டு பதிவுக்காக வி.கே. சசிகலா நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டிலிருந்து எலக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது 1996 மற்றும் 1997ம் ஆண்டுகளில் அந்நியச் செலாவணி மோசடி வழக்குகளை மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பதிவு செய்தனர். இதில் சசிகலா மீது மட்டும் 4 அந்நியச் செலாவணி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் எழும்பூரில் உள்ள பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சசிகலா மீது பெங்களூரு சிறையிலிருந்து வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.  

சசிகலா

அதன் பின்னர் அவர் கையெழுத்திடவில்லை எனக் கூறி மறு குற்றச்சாட்டுப் பதிவுக்காக வரும் 13-ம் தேதி சசிகலா நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சசிகலா தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் விசாரித்தார். அப்போது, ``சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லை. அவர் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும்'' என சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சசிகலா நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி, மறு குற்றச்சாட்டு பதிவுக்குக் காணொலிக் காட்சி மூலம் ஆஜராக அனுமதி அளித்தார். மேலும், 4 மாத காலத்துக்குள் வழக்கு விசாரணையை முடிக்கவும் உத்தரவிட்டார்.