ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுமா, திறக்கப்படுமா? - டிச.18ல் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு | Sterlite hearing at National Green Tribunal

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (10/12/2018)

கடைசி தொடர்பு:18:30 (10/12/2018)

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுமா, திறக்கப்படுமா? - டிச.18ல் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு

ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட்டுக்கெதிரான மாபெரும் மக்கள் போராட்டத்துக்குப் பின் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம் நிர்வாகப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கும் ஆலையையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர் குழுவை அமைத்து உத்தரவு பிறப்பித்தது. 

இதைத்தொடர்ந்து தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழு ஸ்டெர்லைட் ஆலையிலும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் ஆய்வு நடத்திக் கடந்த மாதம் 26-ம் தேதி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காகச் சொன்ன காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை என்றும், ஆலை நிர்வாகத்துக்கு உரிய நோட்டீஸ் அளிக்காமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழக அரசு தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது. தருண் அகர்வால் குழு வரம்பு மீறி செயல்படுகிறது, அதன் ஆய்வு முடிவுகள் சரியானதாக இல்லை என்று வாதிட்ட தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தமிழக அரசின் கொள்கை முடிவு எனவும் கூறியது. அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை இன்று ஒத்தி வைக்கப்பட்டது. 

ஸ்டெர்லைட்

இன்றைய விசாரணையில் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மோசமான நிலையிலிருந்து மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. அதனால்தான் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தலையிட்டு ஆலையை மூடியது எனத் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. 2014-ல் இருந்து 2018-ம் ஆண்டுக்குள் நிலத்தடிநீர் மாசுபாடு தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலைக்கு நோட்டீஸ் ஏதாவது வழங்கப்பட்டதா எனத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தமிழக அரசிடம் கேட்டது. தமிழக அரசின் முழு வாதமும் முடிந்த பிறகு கடந்த வெள்ளிக்கிழமை வாதிட அனுமதி மறுக்கப்பட்ட மனுதாரர்களான வைகோ, பேராசிரியர் பாத்திமா பாபு, ராஜா ஆகியோரின் வாதம் உணவு இடைவேளைக்குப் பின் கேட்கப்பட்டது. பெரிதும் ஆர்வமில்லாமல் கடமைக்காக மட்டுமே இந்த வாதங்களைப் பசுமை தீர்ப்பாயத் தலைவர் கோயல் கேட்டுள்ளார். அவரவர் வாதங்களை முடித்தவுடன் வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் திங்கள் கிழமை இணையத்தில் பதிவேற்றப்படும் எனக் கூறி விசாரணையை முடித்து வைத்துள்ளார். 

தருண் அகர்வால் கமிட்டியின் அறிக்கை இப்போது வரை தமிழக அரசுக்கோ மற்ற எதிர் மனுதாரர்களுக்கோ வழங்கப்படவில்லை. மேலும் வேதாந்தா மற்றும் தமிழக அரசின் வாதத்தை மட்டும் கூர்ந்து கேட்ட நீதிபதி கோயல் தூத்துக்குடி மக்களின் சார்பாக வாதிட்ட வைகோ, பாத்திமா பாபு போன்றோரின் வாதங்களை அலட்சியமாகவே கவனித்திருப்பது ஒருதலைபட்சமான தீர்ப்புக்கு வழிவகுக்கலாம் என அச்சம் கொள்ள வைக்கிறது.