`நடிகர் சூர்யா செய்த உதவி மிக முக்கியமானது!'  - டெல்டாவில் நெகிழ்ந்த சீமான் | Actor surya's contribution for the gaja cyclone relief

வெளியிடப்பட்ட நேரம்: 17:33 (10/12/2018)

கடைசி தொடர்பு:17:42 (10/12/2018)

`நடிகர் சூர்யா செய்த உதவி மிக முக்கியமானது!'  - டெல்டாவில் நெகிழ்ந்த சீமான்

உங்களுக்கு நம்பிக்கையாக இருப்பவர்கள், உங்களுக்கு எதுவும் செய்யாவிட்டால்தான் அதிர்ச்சியடைய வேண்டும். தமிழனுக்குப் பாதிப்பு என்றாலே அதை ரசிக்கக்கூடிய அரசுகள்தான் இங்கு இருக்கின்றன. 

`நடிகர் சூர்யா செய்த உதவி மிக முக்கியமானது!'  - டெல்டாவில் நெகிழ்ந்த சீமான்

டிகர் சூர்யா ரசிகர் மன்றத்தினர் ஏற்பாடு செய்த நிகழ்வில் சீமான் கலந்துகொண்டு பேசியதை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர் டெல்டா பகுதி மக்கள். `நாங்கள் உணவு தயாரிக்கும் வேலைகளைச் செய்கிறோம். அதற்குள் அந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள்' எனக் கூறி சீமானை அழைத்து வந்துள்ளனர் ரசிகர் மன்ற நிர்வாகிகள். 

சூர்யா மன்றத்தினர் நிகழ்வில் சீமான்

தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது நடிகர் சூர்யா ரசிகர் மன்றம். இதற்காக, கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆராய்ந்த அகில இந்திய சூர்யா ரசிகர் மன்றத் தலைவர் பரமு, `மக்களுக்கு நல்ல சாப்பாடு போட வேண்டும். அதையும் பிரமாண்டமான விருந்தாகப் படைக்கலாம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்' என மன்ற நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து, 2,000 பேருக்கு உணவு தயாரானது. சாப்பாடு, சாம்பார், அப்பளம், பொறியல், வடை, பாயசம் என அறுசுவை விருந்து தயாராகிக்கொண்டிருந்தது. அப்போது பேசிய பரமு, `விருந்து கொடுப்பது ஒருபுறம் இருந்தாலும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டக் கூடிய வகையில் ஏதாவது செய்ய வேண்டும்' எனக் கூற,

நடிகர் சூர்யா

அருகில் இருந்த மன்ற நிர்வாகி ஒருவர், `இன்று தஞ்சையில்தான் சீமான் இருக்கிறார். அவரை அழைத்துப் பேச வைத்தால் நன்றாக இருக்கும்' என யோசனை தெரிவித்துள்ளார். இதையடுத்து, உடனே சீமானுக்கு போன் செய்தவர்கள், `சூர்யா மன்றம் சார்பாக மக்களுக்கு உதவி செய்ய வந்திருக்கிறோம். தற்போது உணவு தயாரிக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. அந்த மக்கள் மத்தியில் நீங்கள் 1 மணி நேரம் பேச வேண்டும். அதற்குள் உணவு தயாராகிவிடும்' எனக் கூறியுள்ளனர். இதைக் கேட்ட சீமானும், `நல்ல காரியம் செய்கிறீர்கள். உடனே வருகிறேன்' என உறுதியளித்துவிட்டு வந்தார். 

சீமான்

ஒருபுறம் உணவு தயாராகிக்கொண்டிருக்க, மறுபுறம் எழுச்சி உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார் சீமான். அவர் பேசும்போது, `புயலால் விழுந்த மரம் உடனே துளிர்த்துவிட்டது. நாம் இன்னும் துளிர்க்காமல் இருக்கிறோம். இலையுதிர் காலம் வரும்போது மரமே மொட்டையாகிவிடும். அப்படி நேரும்போது நாம் யாரும் வாழாமல் இருப்பதில்லையே...அதுபோல் இது நம்முடைய இலையுதிர் காலம். அரசாங்கம் எதுவும் செய்யாது என்பது கஜா புயலில் மட்டும் அல்ல, ஒகி புயலிலேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும். வர்தா, தானே புயலிலும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். உங்களுக்கு நம்பிக்கையாக இருப்பவர்கள், உங்களுக்கு எதுவும் செய்யாவிட்டால்தான் அதிர்ச்சியடைய வேண்டும். தமிழனுக்குப் பாதிப்பு என்றாலே அதை ரசிக்கக்கூடிய அரசுகள்தான் இங்கு இருக்கின்றன. 

மக்களோடு உணவருந்தும் சீமான்

நம்மை நாம்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு தாழ்வு வரும்போது அதிலிருந்து நாம் மீள்வதற்கு முயல வேண்டும். அதுதான் உண்மையான வெற்றியாக இருக்க முடியும். உங்களுக்குத் தென்னை மரக்கன்று வேண்டுமா...எனக்கு போன் பண்ணுங்கள். உடனே ஏற்பாடு செய்து தருகிறேன். இன்றைக்கு நிறைய நல்ல மனிதர்கள் வந்துவிட்டார்கள். அவர்களிடம் நீங்கள் உதவிகளைக் கேட்டுப் பெறலாம். அரசாங்கம்தான் செய்யாது. மற்றவர்கள் உதவி செய்ய நம்மைத் தேடி ஓடோடி வருவார்கள். இனி தென்னை வளர்வது என்பது பத்து வருடப் போராட்டம்தான். கேரளா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளை நாம்தானே சீர்திருத்தினோம். இந்தப் புயலால் ஏற்பட்ட சீரழிவைச் சரிசெய்ய முடியாதா என்ன?' என்றவர், `சூர்யா மன்றத்தினர் மக்களுக்குச் செய்யும் உதவி, மிக முக்கியமானது' என வெகுவாகப் பாராட்டினார். இதன்பிறகு, நீங்களும் சாப்பிட வேண்டும் என சூர்யா மன்றத்தினர் வலியுறுத்தவே, `அவர்களோடு உட்கார்ந்து நானும் சாப்பிடுகிறேன்' என உற்சாகத்தை வெளிப்படுத்தினார் சீமான்.