பவர் ஸ்டார் கடத்தல் வழக்கில் நடந்தது என்ன? - முழு விவரம்! | Detailed report about Power star smuggling case

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (10/12/2018)

கடைசி தொடர்பு:18:15 (10/12/2018)

பவர் ஸ்டார் கடத்தல் வழக்கில் நடந்தது என்ன? - முழு விவரம்!

சினிமாவில் காமெடி முகமாக இருந்தாலும், பவர் ஸ்டாரின் நிஜ வாழ்க்கை அதற்கு நேர் எதிரானது. 'மோசடி, கடன், நீதிமன்றம், கைது' என்று பவர் ஸ்டார் குறித்து அடிக்கடி செய்திகள் வரும். இந்நிலையில், கடந்த சில நாள்களாக பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தப்பட்டார், அவரது மனைவி ஜூலியும் கடத்தப்பட்டார், அவரது மகள் வைஷ்ணவி புகார் என்று மீண்டும் பவர் ஸ்டார் லைம் லைட்டுக்கு வந்துள்ளார்.

பவர் ஸ்டார்

"பெங்களூருவைச் சேர்ந்த மசூர் ஆலம் என்பவரிடம், பவர் ஸ்டார் சீனிவாசன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.25 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார். ஆனால், அதில் ரூ.35 லட்சத்தை திருப்பிக்கொடுத்த பவர் ஸ்டார், மீதித் தொகையை வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதுதொடர்பாக பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவந்தது. இதனிடையே, சென்னையைச் சேர்ந்த செல்வின் என்பவரிடம் ரூ.10 லட்சத்தைக் கடனாக வாங்கியிருக்கிறார் பவர் ஸ்டார். அந்தத் தொகையையும் பவர் ஸ்டார் திருப்பி வழங்கவில்லை.

பவர் ஸ்டாருக்கு, சொந்தமாக ஊட்டியில்  ஒரு பங்களா உள்ளது. இதனால், அவரை அங்கு அழைத்துச்சென்றால், அந்த பங்களாவை நம் பெயருக்கு எழுதிவிடலாம் என்று ஆலம் மற்றும் செல்வின் தரப்பினர் பிளான் போட்டுள்ளனர். சினிமா வாய்ப்பு என்று கூறி, பவர் ஸ்டாரை கடந்த வாரம் கோவைக்கு அழைத்துவந்துள்ளனர். கோவைக்கு வந்த பவர் ஸ்டாரை அப்படியே நீலகிரிக்கு அழைத்துச்சென்றுள்ளனர். ஊட்டியில் உள்ள பங்களா, மனைவி ஜூலியின் பெயரில் இருப்பதால், அவரையும் ஊட்டிக்கு வரவழைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, பத்திரப்பதிவு அலுவலகத்துக்குச் சென்றபோது, சில காரணங்களால் பத்திரப்பதிவு நடக்கவில்லை.

இதற்குள், வைஷ்ணவி மற்றும் பவர் ஸ்டார் ஆகியோர் அடுத்தடுத்து போலீஸில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், தற்போது 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்" என்று போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

பவர் ஸ்டார் கடன் வாங்கியது பிரபல ஃபைனான்சியர் போத்ராவுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது. போத்ரா மீது ஏற்கெனவே பல்வேறு புகார்கள் உள்ளன.  ஊட்டி பங்களாவைத் தங்களது பெயரில் மாற்றித்தருமாறு பவர்ஸ்டாரிடம் அவர்கள்  கேட்டுள்ளனர். ஆனால், பவர் ஸ்டார் அவர்களுக்கு சரியாக பதிலளிக்காமல் காலத்தைக் கடத்தியுள்ளார். இதனால்தான், கடத்தல் பிளான் நடந்துள்ளது.  ஆனால், அந்த பங்களா  ஜூலி பெயரில் இருந்ததால், பவர் ஸ்டாரை பேசவைத்து, ஜூலியையும் ஊட்டிக்கு வரவழைத்துள்ளனர். இந்தத் தகவலைக் கேட்டு உஷாரான ஜூலி, தனது மகளிடம்  ஒரு புகார் கடிதத்தை எழுதிக்கொடுத்து, "ஏதாவது பிரச்னை என்றால், இந்தக் கடிதத்தை போலீஸில் அளித்துவிடு" என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, ஊட்டியில் பத்திரப்பதிவுக்குச் சென்றுள்ளனர். பவர் ஸ்டாரைப் போலவே ஜூலியின் மீதும் பல்வேறு மோசடிப் புகார்கள் உள்ளன.

ஜூலி

இதையடுத்து, எச்சரிக்கையாக இருக்குமாறு போலீஸ் தரப்பில் இருந்து பத்திரப்பதிவுத் துறையை அலெர்ட் செய்துள்ளனர். இதனால், பத்திரப்பதிவில் டோக்கன் முடிந்துவிட்டது என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டனர். இதனிடையே, தந்தையும் தாயும் வராததால், ஏற்கெனவே ஜூலி சொல்லியபடி, மகள் வைஷ்ணவி போலீஸில் புகார் கொடுத்தார். விவகாரம் பெரிதாகவே, பவர் ஸ்டாரை மட்டும் கடத்தல் கும்பல் வெளியில் விட்டுள்ளது. சென்னை சென்ற பவர் ஸ்டாரும், தன் பங்குக்கு புகார் கொடுத்துள்ளார். சென்னை போலீஸ் ஊட்டி வந்தது. கடத்தல் கும்பல் தங்கியிருந்த ஹோட்டலில் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் மூலம்தான் முழு விபரமும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கில் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட அனைவரும், சென்னை போலீஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தங்களை 10 பேர் அடங்கிய கும்பல் கடத்தியதாகவும், மேலும் அவர்கள் தங்களை டிபார்ட்மென்ட் ஆள்கள் என்று சொல்லிக்கொண்டதாகவும் பவர் ஸ்டார் மற்றும் ஜூலி தெரிவித்துள்ளனர்.