வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (10/12/2018)

கடைசி தொடர்பு:21:00 (10/12/2018)

`1820ல் வெளிவந்த நூல்கள் இருக்கு!’ - அரிய தமிழ் நூல்களைச் சேகரிக்கும் 84 வயது `ஈழம்’ தமிழப்பனார்

தமிழில் வெளிவந்த பல அரியவகைப்  புத்தகங்களை நாம் காப்பாற்ற மறந்துவிட்டோம். ஆனால், தனது 84 வயதிலும் தமிழுக்காக  வாழ்பவர், முனைவர் 'ஈழம்' தமிழப்பனார்.  இவர், தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பட்டமும் (M.phil) பெற்றதோடு, 'என்னும் எழுத்தும்' என்கிற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து (doctorate) டாக்டர்   பட்டம் பெற்றுள்ளார். அவரைச் சந்திப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றோம். 

தமிழ்

சிறிய வீடு. வீட்டிலுள்ள சின்னச்சின்ன அறைகளில் மூட்டை மூட்டையாகப் புத்தகங்கள். வீடு முழுவதும் நிறைந்திருந்த புத்தக வாசனையினூடே அவரிடம் பேசினோம். "எனக்கு, சிறு வயதிலிருந்து  தமிழ்மீது மிகுந்த ஆர்வமுண்டு. அப்போதே, எங்கள் ஊர் தேவகோட்டையில் சிறிய நூலகம் ஒன்று  அமைத்து, அதில்  'காலணா' காசுக்கு புத்தகங்கள் வாடகைக்குப் படிக்கக் கொடுப்பேன். பிறகு, தமிழில் 'முனைவர்' பட்டம் பெறும்வரை பயின்றேன். சென்னையில், ஒரு குழு அமைப்பில் நான்  பணியாற்றிய போதுதான்,  திருக்குறளின் தொகுப்பு  ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.  தமிழில் இதுவரை வெளிவந்த அனைத்து நூல்களையும் ஒன்றாகத் திரட்டி அதை உலகிற்குத் தர வேண்டும் என்ற ஆசையில்தான், 'உலகத் தமிழ்  நூலகம்' அறக்கட்டளை (world Tamil library trust) ஒன்றை  நிறுவியிருக்கிறோம். தமிழில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து நூல்களும் உள்ளன.

தமிழ்

1820ல் வெளிவந்த நூல்கள், நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பதிப்பான 'தேவாரம்', 'கதிரேசன் பெயரில் ஆனந்தக்களிப்பு' போன்ற பல தமிழ் நூல்களும்  இங்கே உள்ளன. தற்போது, மேலும் பல  அரிய புத்தகங்களைச் சேகரித்து வருகிறேன். இன்றைய இளைஞர்களுக்கு, தாய் மொழியான தமிழையே நாம் கற்றுத்தரும் சூழ்நிலையில்தான் உள்ளோம். அயல் மொழிகளுக்கான முக்கியத்துவம் அதிகமாகிவிட்டது. இதையெல்லாம் கடந்து, தமிழ் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன்  இணையதளங்களில் 5,000 நூல்கள் பதிவேற்றம் செய்யப்படுவதற்கான முயற்சி நடந்து கொண்டிருக்கிறது" என்றார்  'ஈழம்' தமிழப்பனார்.