`முதல்வர் சொன்னதால் குறிஞ்சி மருத்துவமனை ஆக்கிரமிப்பை அகற்றவில்லை! - நிர்வாகம் விளக்கம் | Salem Kurinji hospital administration explains about encroachment issue

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (10/12/2018)

கடைசி தொடர்பு:21:38 (10/12/2018)

`முதல்வர் சொன்னதால் குறிஞ்சி மருத்துவமனை ஆக்கிரமிப்பை அகற்றவில்லை! - நிர்வாகம் விளக்கம்

குறிஞ்சி மருத்துவமனை

சேலத்தின் பிரதான பகுதியாக இருப்பது  ஐந்து ரோடு. இந்தப் பகுதியில் இஸ்மாயில்கான் ஏரியின் கோடிவாய்க்கால் பாதையைச் சிலர் ஆக்கிரமித்து வீடுகள், கடைகள், மருத்துவமனைகள் கட்டிக்கொண்டார்கள். இந்த நீர்வழிப் பாதையை மீட்க பூமொழி, மாஸ் கணேஷ் உட்படப் பல சமூக ஆர்வலர்கள் போராடினார்கள். அதன் விளைவாக, சேலம் நீதிமன்றம் இந்த நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டுள்ளது.

கணேஷ்அதையடுத்து, சேலம் மாநகராட்சி ஊழியர்கள், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் என 300-க்கும் மேற்பட்டவர்கள்,ஆக்கிரமிப்புகளை அகற்ற படையெடுத்தார்கள். ஐந்து ரோட்டில் உள்ள குறிஞ்சி மருத்துவமனை,  நீர்வழிப்பாதையில் 1/2 ஏக்கர் ஆக்கிரமித்துள்ளது. அதை அகற்றச் சென்றபோது மருத்துவமனை நிர்வாகத்திற்கும் அரசு ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென `முதல்வர் சொல்லிவிட்டார் 'மருத்துவமனை மீது கை வைக்கக் கூடாது’ என்று நிர்வாகம் தரப்பில் கூறியதையடுத்து மருத்துவமனை ஆக்கிரமிப்பை அகற்றாமல் மருத்துவமனைக்கு அடுத்துள்ள வீடுகளை இடித்துத் தரைமட்டம் ஆக்கினார்கள். `சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது. ஏழைகளின் வீடுகளை மட்டும் இடிக்கும் மாநகராட்சி, வசதியானவர்களுக்கு வளைந்துபோவதா?’ என அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்தார்கள்.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வழக்குப் போட்டவர்களில் ஒருவரான திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த மாஸ் கணேஷ்,``மழைக்காலங்களில்,  மழைநீர் வெளியேற முடியாமல் வீட்டுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தும். அதனால், கடந்த 2010ல் சேலம் இஸ்மாயில்கான் ஏரியின் நீர்வழித் தடத்தை மீட்கச் சேலம் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டோம். இந்த வழக்கில், நீர்வழிப்பாதையின் ஆக்கிரமிப்பை அகற்றச் சொல்லி தீர்ப்புவந்துள்ளது. இந்த வாய்க்காலில் 1/2 ஏக்கர் பகுதியை குறிஞ்சி மருத்துவமனை ஆக்கிரமித்துக் கட்டியிருக்கிறது. மாநகராட்சியில் முறையாக அறிவிப்பு செய்தும் இன்னும் அகற்றாமல் இருக்கிறார்கள். மாநகராட்சி ஊழியர்கள் இன்று இடிப்பதற்குச் சென்றார்கள். குறிஞ்சி மருத்துவமனைக்கு அரசியல்வாதிகள் சப்போர்ட் செய்வதால், அதை இடிக்கவில்லை. ஏழைகளின் வீடுகளை மட்டும் இடித்திருக்கிறார்கள். பாகுபாடு பார்க்காமல் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். இல்லையென்றால், மீண்டும் நான் நீதிமன்றம் செல்லுவேன்’’ என்றார்.

ஜெயராமன்

இதுபற்றி குறிஞ்சி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜெயராமன், ''இந்த வாய்க்காலில் 30 ஆண்டுகளாகத்  தண்ணீர் போனதில்லை. அதனால், வருவாய்த்துறை அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று, கீழே தண்ணீர் போக இடம் விட்டு மேலே போர்டிகோ கட்டி இருக்கிறோம். கடந்த வாரம் ஆக்கிரமிப்பு அகற்றுவதாக நோட்டீஸ் கொடுத்தார்கள். அதையடுத்து முதல்வரிடம் நானும், மாவட்ட கலெக்டரும் பேசினோம். முதல்வ,ர் `எங்க மருத்துவமனையை இடிக்க வேண்டாம்’ என்று கூறினார். ஆனால் இந்த கலெக்டர், முதல்வரின் பேச்சை மதிக்காமல் செயல்படுகிறார். அமைச்சர்கள், முதல்வர் உட்பட என்னுடைய நோயாளிகள். விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் கட்சியினர் என்னிடம் பணம் கேட்டு மிரட்டினார்கள். மருத்துவமனைக்குள் பல நோயாளிகள் இருப்பதால் உடனே காலிசெய்வது முடியாது. எங்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும்’’ என்றார்.