`கழிவறை இல்லாதது அவமானம்; அப்பாவைக் கைதுசெய்யுங்கள்!’ - புகார் அளித்த இரண்டாம் வகுப்பு மாணவி | vellore Second standard student files police complaint against father for not built toilet in house

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (10/12/2018)

கடைசி தொடர்பு:22:30 (10/12/2018)

`கழிவறை இல்லாதது அவமானம்; அப்பாவைக் கைதுசெய்யுங்கள்!’ - புகார் அளித்த இரண்டாம் வகுப்பு மாணவி

‘வீட்டில் கழிவறை கட்டித்தராத என்னுடைய அப்பாவைக் கைதுசெய்யுங்கள்’ என்று கூறி, இரண்டாம் வகுப்பு மாணவி போலீஸில் புகார் அளித்த சம்பவம் வேலூரில் நடந்துள்ளது.

மாணவி

வேலூர் மாவட்டம் ஆம்பூர் நடராஜபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர், இஹஸ்ஸானுல்லாஹ். இவரின் மகள் ஹனீப்பா ஜாரா (7). இரண்டாம் வகுப்பு படிக்கிறார். இன்று மாலை, ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்குச் சென்ற மாணவி ஹனீப்பா ஜாரா, சப்-இன்ஸ்பெக்டர் வளர்மதியைச் சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். ‘‘எனது வீட்டில் கழிவறை இல்லை. திறந்த வெளியைப் பயன்படுத்திவருகிறோம். இது எனக்கு அவமானமாக இருக்கிறது. கழிவறை கட்டித்தர அப்பாவிடம் கேட்டேன். 

நான் வகுப்பில் முதல் ரேங்க் எடுத்தால் கழிவறை கட்டித்தருவதாக அப்பா கூறினார். எல்.கே.ஜி முதல் தற்போது இரண்டாம் வகுப்பு வரை நன்றாகப் படித்து முதல் ரேங்க் எடுத்துக்கொண்டே இருக்கிறேன். என் அப்பா கழிவறை கட்டித்தராமல் ஏமாற்றிக்கொண்டேயிருக்கிறார். எனவே, அப்பாவைக் கைது செய்யுங்கள் அல்லது கழிவறை எப்போது கட்டித்தருவார் என எழுதிக்கொடுக்கச் சொல்லுங்கள்’’ என்று தெளிவாகக் கூறியிருந்தார் அந்த மாணவி.

புகாரை பெற்றுக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர், மாணவியைப் பாராட்டியதோடு, அவரின் தந்தையை போலீஸ் நிலையம் வரவழைத்து அறிவுறுத்தினார். இதையறிந்த நகராட்சி துப்புரவு ஆய்வாளர், `அரசு திட்டத்தில் மாணவியின் வீட்டுக்கு கழிவறை கட்டித்தருவதாக' உறுதியளித்தார். இதுதொடர்பாக மாணவியிடம் பேசினோம். ``அப்பா பாத்ரூம் கட்டித்தருவதாகக் கூறி ஏமாற்றிவிட்டார். போலீஸில் புகார் அளிக்க அம்மாவை இரண்டு நாள்களுக்கு முன்பாகவே அழைத்தேன். அம்மா வேண்டாம் என்றார்.
பின்னர் நானே ஆட்டோக்காரர் அங்கிள் மூலம் போலீஸ் நிலையத்திற்குச் சென்று, அப்பா மீது புகார் அளித்தேன். எனக்கு டாக்டராக ஆசை’’ என்றார்
.