திருப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டினர் மேலும் 12 பேர் அதிரடி கைது! | Bangladeshis 12 peoples arrested for illegal stay at tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (10/12/2018)

கடைசி தொடர்பு:23:00 (10/12/2018)

திருப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டினர் மேலும் 12 பேர் அதிரடி கைது!

திருப்பூரில், உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 12 பேர் காவல் துறையினரால் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள்

திருப்பூர் மாவட்டம் சிறுபூலுவப்பட்டி பகுதியில், பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஆட்கள் சிலர் பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்தவித உரிய ஆவணங்களும் இல்லாமல் தங்கியிருப்பதாக காவல் துறைக்கு கடந்த 8 -ம் தேதி தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதியில் சோதனை நடத்திய காவல் துறையினர், பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த சபுஷ் மற்றும் அப்துல் ரஷிஷ் ஆகிய இருவரை முறையான பாஸ்போர்ட் மற்றும் விசா ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாகத் தங்கியிருந்ததாகக் கைதுசெய்தனர்.

இதையடுத்து, கைதுசெய்யப்பட்ட நபர்கள் தங்கியிருந்த அதே பகுதியில், மேலும் யாராவது சட்டவிரோதமாகத் தங்கியிருக்கிறார்களா என்று தொடர் விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில், இன்று நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், மேலும் 12 பங்களாதேஷ் நாட்டினர்  காவல் துறையினரால் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

பஜ்லுல் ஹக், முகமது ரோனி ஷேக், முகமது ரிடாய் ஷேக், முகமது ரசிதுல் ஹக், முகமது லிடான், பஷார், முகமது சலிம் காஸி, முகமது ராபின் ஹுசைன், இப்ராஹிம் காஸி, முகமது மமுன் பிஷ்வாஸ், முகமது அன்வர் ஹுசைன், டெலோவார் ஹுசைன் ஆகிய 12 பேரும் உரிய ஆவணங்கள் இல்லாமல் திருப்பூரில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு, அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.