வெளியிடப்பட்ட நேரம்: 01:42 (11/12/2018)

கடைசி தொடர்பு:07:06 (11/12/2018)

`இணைப்பு கொடுத்ததைச் சொல்லலைங்க' - புதுக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து இருவர் பலி!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அரையப்பட்டி கிராமத்தில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக்கோரி எம்.எல்.ஏ மற்றும் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலைமறியல்


புதுக்கோட்டை மாவட்டம் அரையப்பட்டி, வன்னியன் விடுதி, மறமடக்கி  உள்ளிட்ட கிராமப் பகுதிகளில், கஜா புயலால், அறுந்து விழுந்த மின்கம்பங்களைச் சீரமைத்து, மின்சாரம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நீண்ட இழுபறிக்குப் பிறகு, ஆலங்குடியை அடுத்த அரையப்பட்டி கிராமத்தில் கருவன்குடியிருப்பு பகுதியில் ஒரு பகுதிக்கு நேற்று மின்சாரம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இந்த பகுதியைச் சேர்ந்த சுசீலா(47), தண்ணீர் எடுக்கக் கிணற்றுக்குச் சென்றுள்ளனர். மின்சாரம் வழங்கப்பட்டது தெரியாத சுசீலா, வழியில் கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்துள்ளார். மின்சாரம் பாய்ந்துள்ளது. இதைப்பார்த்து, அவரை காப்பாற்றச் சென்ற சக்திவேல் (24) மீதும் மின்சாரம் பாய்ந்ததில், இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பலி

கடந்த 20 நாளாக மின்சாரம் இல்லாத நிலையில், மின்சாரம் கொடுத்தது தெரியாமல்தான் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர் என்கின்றனர் இப்பகுதி மக்கள். அரையப்பட்டி மக்களிடம் பேசினோம்,  ‘எங்கள் ஊரில் அந்தப் பகுதிக்கு மின்சாரம் கொடுத்ததே, பலருக்கும் தெரியாது. இவர்கள் இரண்டு பேரும் இறந்த பிறகுதான் எங்களுக்கே தெரிகிறது. 20 தினங்களுக்கும் மேலாக இங்கு மின்சாரம் இல்லை. இத்தனை தினங்கள் மின்சாரம் இல்லாமல், சமாளித்துவிட்டோம். இன்னும் சில தினங்கள் காத்திருப்போம். ஆனால், அறுந்து தாழ்வாக கிடந்தவற்றைச்  சரி செய்யாமல் மின்சாரம் கொடுத்துள்ளனர். மேலும், மின் இணைப்புகளைச் சரிசெய்து, மின்சாரம் வழங்கப்பட்டதையும் பொதுமக்களிடம் முறையாகத் தெரிவிக்கவில்லை. மின் ஊழியர்களின் கவனக்குறைவால் இப்போது, பரிதாபமாக இரண்டு பேர் உயிரிழந்து விட்டனர்’ என்றனர்.

பலி

இறந்த குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரியும், புயலால் பாதித்த ஆலங்குடி பகுதிகளை ஆட்சியர் நேரடியாகப் பார்வையிட வலியுறுத்தியும் தி.மு.க  ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன் தலைமையில் ஆலங்குடி-மறமடக்கி சாலையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இறந்த குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.  பாதிக்கப்பட்ட  குடும்பத்தினர் மற்றும் ஏராளமான  பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர். இங்கு, 500-க்கும் அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டனர். புதுக்கோட்டை ஆர்.டி.ஓ பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அனைவரும் கலைந்தனர். சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தால், பரபரப்பு ஏற்பட்டது.