வெளியிடப்பட்ட நேரம்: 04:49 (11/12/2018)

கடைசி தொடர்பு:07:10 (11/12/2018)

தேவகோட்டையில் கேள்வித்தாள் திருடிய மாணவர்கள் சிக்கியது எப்படி!

பள்ளியின் பூட்டை உடைத்து அரையாண்டுத் தேர்வு கேள்வித்தாளை திருடிய ஏழு மாணவர்கள் போலீஸில் சிக்கியுள்ளனர்.

பள்ளி

தமிழகம் முழுவதும் நேற்று அரையாண்டுத் தேர்வுகள் துவங்கி உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை  நடைபெற உள்ள தேர்வுகளுக்கான வினாத்தாள் சனிக்கிழமை அதிகாலை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகாவில் உள்ள 26 பள்ளிகளுக்கான வினாத்தாள் தேவகோட்டை நோடல் பள்ளியான என்.எஸ்.எம்.வி.பி.எஸ்., பள்ளியில் வைக்கப்பட்டிருந்தது. பள்ளியில் வாட்ச்மேன் சண்முகம் மட்டும் இருந்துள்ளார். இந்த நிலையில், ஞாயிறன்று காலை பணியாளர்கள் பள்ளிக்கு வந்து பார்த்தபோது தலைமையாசிரியரின் அறை பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. 

அன்றாட வேலைகளுக்காக பணியாளர்கள் உள்ளே சென்று பார்த்தபோது தலைமை ஆசிரியர் அறையின் உள்ளே இருந்த கேள்வித்தாள்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து தலைமை ஆசிரியர் வெங்கடாசலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்தில் எஸ்.பி., ஜெயசந்திரன், ஏ.டி.எஸ்.பி., ஜானகிராம், டி.எஸ்.பி, கார்த்திகேயன் உள்ளிட்டோர் விசாரணை செய்தனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் தடையங்களைச் சேகரித்தனர். 

பள்ளி

விசாரணையில் 9-ம் வகுப்பு தமிழ் முதல்தாள், 10 வகுப்பு தமிழ், ஆங்கிலம், 11-ம் வகுப்பு ஆங்கிலம், 12-ம் வகுப்பு தமிழ், ஆங்கிலம், கணிதம், விலங்கியல், கணினி அறிவியல் வினாத்தாள் பண்டல்கள் உடைக்கப்பட்டு, அதிலிருந்த கேள்வித்தாள்கள் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. போலீஸார் விசாரணை நடத்தியதில் அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் 7 மாணவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

அதன் அடிப்படையில் தேவகோட்டை நகர காவல் துறையினர் மேலும் வேறு யாருக்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை துரிதப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல் அரையாண்டுத் தேர்வு நடைபெற்றது. மாணவர்கள் திருடிய கேள்வித்தாள்களை ஜெராக்ஸ் எடுக்கும்போது ஜெராக்ஸ் கடைக்காரர் போலீஸுக்குத் தகவல் கொடுத்ததால் அந்த மாணவர்கள் போலீஸில் சிக்கிக்கொண்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க