வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (11/12/2018)

கடைசி தொடர்பு:07:23 (11/12/2018)

`பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்டுள்ள சர்ஜிகல் ஸ்ட்ரைக்' - மோடியைச் சாடிய மு.க.ஸ்டாலின்!

ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் ராஜினாமா செய்துவருவது பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்டிருக்கக் கூடிய சர்ஜிகல் ஸ்ட்ரைக் என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்டாலின்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைக்க வருகை தர இருக்கிறார் சோனியா காந்தி. இதையொட்டி, டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின் சோனியா காந்தியின் இல்லத்துக்கு நேரில் சென்று, சிலை திறப்பு விழா அழைப்பிதழை அவரிடம் அளித்தார். தொடர்ந்து நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்திலும் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் மற்றும் கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தை முடித்துக்கொண்டு நள்ளிரவு சென்னை திரும்பினார் ஸ்டாலின். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

ஸ்டாலின்

அதில், ``விவசாயிகள் நலன் மீது அக்கறை இல்லாத அரசாக மத்திய அரசு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிகள் தலைவர்கள் கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக விவசாயிகள், பெண்கள் பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. விரிவான பொருளாதார வளர்ச்சியைப் பற்றியும் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. ஒரு கூட்டு கூட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எழுத்துரிமை, பேச்சுரிமைக்குரிய சுதந்திரம் இந்த மோடி ஆட்சியில் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அனைத்துக் கட்சி கூட்டம்

தற்போது பா.ஜ.க ஆட்சியாக அல்லாமல், ஆர்.எஸ்.எஸ் ஆட்சியாக இருக்கிறது. மாலையில் விவாதித்துக் கொண்டிருக்கும்போது கூட உர்ஜித் படேல் ராஜினாமா செய்த செய்தி வந்தது. மோடி ஆட்சியில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர்கள் கூட ராஜினாமா செய்யக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இது இந்த நாட்டின் பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்டிருக்கக் கூடிய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ஆகும். அனைத்துக் கட்சி கூட்டத்தில் நான் பேசும்போது, ``அரசியலுக்கு அப்பாற்பட்டு கட்சி விரோதங்களை மறந்து, மத்தியிலேயே தற்போது மோடி தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாசிச ஆட்சியை அகற்ற நாம் மெகா கூட்டணி அமைத்துப் போராட வேண்டும்'' எனப் பேசினேன்.

ஸ்டாலின்

நேற்று சோனியா காந்தி, ராகுல் காந்தியைச் சந்திக்கும்போது அவர்களிடத்தில் மேக்கே தாட்டூ அணை குறித்து பேசினேன். அவர்களும் சம்பந்தப்பட்ட மாநில முதல்வருடன் பேசுவதாக உறுதி அளித்துள்ளார்கள். அதேபோல் இன்று தேவகவுடாவிடமும் இது குறித்து வலியுறுத்தியுள்ளேன். முன்னதாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக் குறித்து பேசினீர்களா என ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ``இல்லை. அது குறித்து பேசவில்லை" எனக் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க