`சர்கார் விவகாரம்' - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு! | Case registered three sections against director Murugadoss

வெளியிடப்பட்ட நேரம்: 03:59 (11/12/2018)

கடைசி தொடர்பு:07:38 (11/12/2018)

`சர்கார் விவகாரம்' - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.

சர்கார்

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்து தீபாவளிக்கு வெளியான திரைப்படம் சர்கார். இந்தப் படத்தில் அரசின் நலத்திட்டங்களைத் தவறாகச் சித்திரித்ததாகவும், ஜெயலலிதாவின் இயற்பெயரை வரலட்சுமி கேரக்டருக்கு பயன்படுத்தியதாகவும் கூறி அ.தி.மு.க-வினர் படம் ரிலீஸான திரையரங்குகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து விவகாரம் பெரிதாக, படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தன்னை காவல்துறை கைது செய்யலாம் எனக் கூறி முன்ஜாமீன் கோரி இயக்குநர் முருகதாஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

சர்கார்

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், முருகதாஸுக்கு முன் ஜாமீன் அளித்தனர். இந்த வழக்கின் விசாரணை சமீபத்தில் நடந்துபோது, அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் 'சர்கார்' படத்தில் அரசுத் திட்டங்களை விமர்சித்ததற்காக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அவர் எடுக்கும் படங்களில், அரசின் திட்டங்களையும் அரசையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்க மாட்டேன் என்றும் உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார். ஆனால் அதற்கு மறுத்து, `படத்தில் காட்சிகளை வைப்பது என்பது என் கருத்து சுதந்திரம். 

முருகதாஸ்

ஒரு படத்துக்காக மன்னிப்பு கேட்பது என்பது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. எனவே, அரசின் நலத்திட்டங்களை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது. இனி வரும் படங்களில் விமர்சிக்க மாட்டேன் என்ற உத்தரவாதமும் அளிக்க முடியாது" என்று முருகதாஸ் கூறினார். இந்த நிலையில், திடீரென நேற்று முருகதாஸ் மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர். படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகள் வைத்ததாகக் கூறி சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். இது தமிழ் திரையுலக வட்டாரத்தில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க