``மனுநாளில் ஆயிரம் பேர் வருவர்; அனைவருக்கும் வழிகாட்டுகிறோம்'' - கல்லூரி மாணவர்கள் நெகிழ்ச்சி!!!  | college students help to thousand people in namakkal collector office

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (11/12/2018)

கடைசி தொடர்பு:13:40 (11/12/2018)

``மனுநாளில் ஆயிரம் பேர் வருவர்; அனைவருக்கும் வழிகாட்டுகிறோம்'' - கல்லூரி மாணவர்கள் நெகிழ்ச்சி!!! 

``மக்களுக்குச் செய்யும் பணி மகேசனுக்கே" செய்வதாக நமது முன்னோர்கள் கூறுவர். அந்த வகையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் எழுதப், படிக்கத் தெரியாத கிராமப்புற மக்களுக்குத் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் இலவசமாக மனுக்களை எழுதித் தருகின்றனர். 

மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் தங்களுக்குத் தேவையான உதவிகள் அரசு அதிகாரிகளிடமிருந்து கிடைக்காதபோது அதிகாரிகளைக் கண்டித்தும், ஆட்சியாளர்களைக் கண்டித்தும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபடுகின்றனர். 
இங்கும் அவர்களுக்குக் கோரிக்கை நிறைவடையாத பட்சத்தில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தெரியப்படுத்தும் வகையில் வாரம்தோறும் திங்கள்கிழமை நடக்கும் மனுபெறும் நாளில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலங்களுக்கும் மனுகொடுக்க கிராமப்புறத்தில் வசிக்கும் மக்கள் ஆயிரக்கணக்கில் வருகின்றனர். எழுத, படிக்கத் தெரிந்த மக்கள் தாங்கள் வரும்போதே தங்களின் கோரிக்கையை மனுக்களாக எழுதிவருகின்றனர். ஆனால், எழுத, படிக்கத் தெரியாத கிராம மக்கள் தங்கள் கோரிக்கையை எழுதித்தரக்கோரி அனைவரிடமும் கேட்கின்றனர். 
இதில் சிலர் மனுக்களை எழுதித் தருகின்றனர். சிலரோ முதியவர்கள், கிராமவாசிகள் எனத் தெரிந்தும், எழுதித்தரமுடியாது என முகத்தில் அடித்தார்போல் கூறுகின்றனர். 

மனுக்களை எழுதித் தரும் சிலரும் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு எவ்வாறு மனுக்களை எழுதித் தரவேண்டும் என்பது குறித்து தெரிவதில்லை. அரைகுறையாகக் கிராமவாசிகள் சொல்லும் கோரிக்கையை எழுதி தருகின்றனர். இத்தகைய மனுக்களை அதிகாரிகள் அலட்சியப் பார்வையால் குப்பைத்தொட்டிக்குச் செல்கிறது. இந்த நிலையில், இம்மக்களுக்கு உதவிடும் வகையில் கடந்த இரண்டு ஆண்டாக கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 20 பேர் திங்கள்தோறும் முதியவர், கிராமவாசிகள் மற்றும் சரியான தகவல் தெரியாதவர்களுக்கு உதவிடும் வகையில் ஆலோசனைகளைக் கூறி, மனுக்களை எழுதித் தருகின்றனர். இதனால், தங்கள் கோரிக்கையை தெளிவாக அதிகாரிகளுக்கு விளக்கிச் சொல்ல முடிவதாக மனுதாரர்கள் கூறினர். 

இதுபற்றி பிஸியாக மனு எழுதித் தந்துகொண்டிருந்த மாணவர் செந்திலிடம் பேசினோம், 
நான் கடந்த இரண்டு ஆண்டாக இங்கு வந்து எழுதித் தருகிறேன். ஆரம்பத்தில் எனக்கும் ஒன்றும் புரியவில்லை. திங்கள் மட்டும் ஆயிரம் பேருக்கு மேல் வருவர். இதில் கிராமப்புற மக்களே அதிகம். இந்தப் பணிகள் அனைத்தும் இலவசமாகவே செய்யப்படுகிறது. 
உடல் ஊனமுற்றவர்கள் நிறைய பேர் வருகின்றனர். அவர்களை அலைய விடக்கூடாது, தாமதப்படுத்தக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு முதலில் மனு எழுதித்தந்து, எங்கு அலுவலகம் இருக்கிறது, எப்படிச் செல்ல வேண்டும் என்று விளக்கிச் சொல்கிறோம். அவர்கள் பதிலுக்கு நன்றியைச் சொல்வர். இதற்கு எங்கள் கல்லூரிக்குதான் நன்றி சொல்ல வேண்டும். 
 


 

வாரம்தோறும் சுழற்சி முறையில் வருகிறோம். காலையில் இருந்து மதியம் 2 மணி வரைக்கும் அதிகளவில் கூட்டம் இருக்கும். மனுக்களை எழுதித் தந்தவுடன் அவர்கள் - குறிப்பாக வயது முதிந்தவர்கள் எங்களை வாழ்த்தும்போது, நெழ்ச்சியாக இருக்கும். இதுவே, மிகுந்த மனநிறைவைத் தருகிறது'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க