வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (11/12/2018)

கடைசி தொடர்பு:14:20 (11/12/2018)

`இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்துக்கு எதிராக பொங்கிய மாதர் சங்கம்!

``சமுதாயத்தைச் சீர்குலைக்கும் திரைப்படங்களைத் திரையிடக்கூடாது'' என வலியுறுத்தி, `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' என்ற படம் திரையிடப்பட்ட திரையரங்கு முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாதர் சங்கம் நிர்வாகிகள் போராட்டம்

நடிகர் விமல், சிங்கம்புலி நடித்து தற்போது திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'. இந்தப் படம் வந்தது முதல் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. இந்த நிலையில், இந்தப் படத்துக்கு மாதர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மதுரையிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் மதுரை மாநகர், புறநகர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர், பேனர்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மதுரை நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை  காளவாசல் பகுதியில் உள்ள தியேட்டர் ஒன்றில் ஒட்டியிருந்த போஸ்டர்களை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் தலைமை தாங்கினார். மேலும், மாதர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.சசிகலா, புறநகர் மாவட்டத் தலைவர் க.பிரேமலதா, மாவட்டச் செயலாளர் செ.முத்துராணி, மற்றும் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் உட்படப் பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

மாதர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.சசிகலா கூறுகையில், ``தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பெரும் வன்கொடுமை அரங்கேறிவருகிறது. இந்த நிலையில், இந்த திரைப்படம் தவறுகளை அதிகப்படுத்தும் விதமாக வெளியாகியுள்ளது. இப்படத்தின் போஸ்டர்கள் பள்ளி, கல்லூரிகள் இருக்கும் பகுதியில் அதிக அளவு ஒட்டப்பட்டுள்ளது. இதனால் பெண் குழந்தைகளுக்கு மன அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும். படத்தின் பெயரே மிகவும் மோசமாக உள்ளது. 100% கிளாமர் என்று போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தணிக்கை சான்றுகள் பற்றிய குறியீடுகள் இல்லை. இதை எவ்வாறு மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது என்று தெரியவில்லை. எனவே, சமுதாயத்தை சீர்குலைக்கும் வகையான இந்தப் படத்தையும் போஸ்டர்களைத் தடை செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.