ஸ்மார்ட் கார்டு, எல்.கே.ஜி வகுப்புகள், 11 லட்சம் டேப்லட்ஸ் - அரசுப் பள்ளிகளில் அசத்தும் வசதிகள்! | Tamil Nadu school education minister says, soon many changes will happen in the Tamil Nadu Schools

வெளியிடப்பட்ட நேரம்: 13:36 (11/12/2018)

கடைசி தொடர்பு:13:36 (11/12/2018)

ஸ்மார்ட் கார்டு, எல்.கே.ஜி வகுப்புகள், 11 லட்சம் டேப்லட்ஸ் - அரசுப் பள்ளிகளில் அசத்தும் வசதிகள்!

"ஜனவரி மாதத்தில் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். இந்த ஸ்மார்ட் கார்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும். கியூ.ஆர் கோடு வசதி ஏற்படுத்தப்பட்டு மாணவர்களின் அனைத்து விவரங்களையும், மாற்றுச் சான்றிதழையும் ஸ்மார்ட் கார்டுடன் இணைப்போம்."

ஸ்மார்ட் கார்டு, எல்.கே.ஜி வகுப்புகள், 11 லட்சம் டேப்லட்ஸ் - அரசுப் பள்ளிகளில் அசத்தும் வசதிகள்!

``ஜனவரி மாதத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பல மாற்றங்கள் நடக்கவுள்ளன. பிப்ரவரி மாதத்தில் மத்திய அரசின் முழு உதவியும் கிடைத்துவிடும். இதன்மூலம் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பல்வேறு உதவிகளைப் பெறுவார்கள்" என ஆருடம் சொல்லியிருக்கிறார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன். 

இந்தியாவிலேயே முதல்முறையாகச் செயற்கை நுண்ணறிவு மூலம் வருகைப் பதிவு முறையைச் செய்யும் வசதியை சென்னை அசோக் நகரில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அறிமுகப்படுத்திப் பேசினார் அமைச்சர் செங்கோட்டையன். ``தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதியுதவி பிப்ரவரி மாதத்துக்குள் கிடைத்துவிடும். முன்னதாகவே, ஜனவரி மாதத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பல பணிகளை முடிக்கவுள்ளோம். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் ஏற்படுத்தப்படும். ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் அனைத்து வகுப்பறைகளுக்கும் கணினி வசதி வழங்கப்பட்டு இன்டர்நெட் மூலம் இணைக்கப்படும். ஜனவரி 10-ம் தேதிக்குள் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினியும், பிப்ரவரி மாதத்துக்குள் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் 11 லட்சம் மாணவர்களுக்கு டேப்லெட்டும் (Tablet PC) வழங்கப்படும். இதில் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் விவரங்கள் இடம்பெற்றிருக்கும். 

தற்போது, தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் பட்டப்படிப்பைப் படித்து முடித்து வெளியே வரும் 1.8 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்த நிலையைப் போக்கும்வகையில் ப்ளஸ் 2 முடித்தவுடனே வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் புதியதாக 12 பாடங்களை அறிமுகப்படுத்த உள்ளோம். இந்த ஆண்டே பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கும் மிதிவண்டி வழங்க ஏற்பாடு செய்துவருகிறோம். 

செங்கோட்டையன் - அரசுப் பள்ளி

ஜனவரி மாதத்தில் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். இந்த ஸ்மார்ட் கார்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும். கியூ.ஆர் கோடு வசதி ஏற்படுத்தப்பட்டு மாணவர்களின் அனைத்து விவரங்களையும், மாற்றுச் சான்றிதழையும் ஸ்மார்ட் கார்டுடன் இணைப்போம். 

ஜனவரி மாதத்தில் அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும். இதன்மூலம், முதல் ஆண்டில் 54,000 குழந்தைகள் பயன்பெறவுள்ளனர். இந்தியாவிலேயே முதல்முறையாகச் செயற்கை நுண்ணறிவு மூலம் வருகைப் பதிவு முறையைச் சென்னை அசோக் நகரில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தனியார் சமூக மேம்பாட்டு நிதி மூலம் ஓர் ஆண்டுக்குள் தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து மகளிர் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தப்படும்" என்றார். 

பெங்களூருவைச் சேர்ந்த ICET IT Solutions நிறுவனம் செயற்கை நுண்ணறிவு வருகைப் பதிவேட்டை அறிமுகப்படுத்துகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஶ்ரீதர், ``ஒவ்வொரு வகுப்பிலும் வருகைப் பதிவை பதிவு செய்வதற்கு 5 நிமிடங்களுக்கு மேலாகிறது. இனி, இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் வகுப்பறையில் ஆசிரியர் நுழைந்தவுடன் ஸ்மார்ட் போனில் ஒரு புகைப்படத்தை எடுத்தாலே போதுமானது. ஒன்றிரண்டு விநாடிகளிலேயே வருகைப்பதிவை முடித்துவிடலாம். இதன்மூலம் ஆசிரியர்கள் வகுப்பெடுப்பதில் கூடுதலான நேரமும், அதிக கவனத்தையும் செலுத்த முடியும். வகுப்பு ஆரம்பித்தவுடனே வருகைப் பதிவு விவரங்கள் உடனே தலைமையாசிரியருக்கும், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கும் கிடைத்துவிடும். இதன்மூலம், அனைத்துப் பள்ளிகளின் செயல்பாடுகளையும் கண்காணிக்க முடியும்" என்றார். 

``ஒவ்வொரு மாதமும் அமைச்சர் அரசுப் பள்ளிகளில் ஏதேனும் ஒரு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறார். ஆனால், புதிய வசதிகளைப் பயன்படுத்தும் வகையில் அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளைச் செய்துதருவதில் கவனம் செலுத்தினால் மட்டுமே அரசுப் பள்ளிகளில்  மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கமுடியும்" என்கின்றனர் ஆசிரியர்கள். 


டிரெண்டிங் @ விகடன்