` இரட்டை இலையே வந்தாலும் தேவையில்லை!'  - இணைப்பு பேச்சால் கொந்தளித்த தினகரன் | TTV Dinakaran angry over ADMK-AMMK merger talks

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (11/12/2018)

கடைசி தொடர்பு:14:23 (11/12/2018)

` இரட்டை இலையே வந்தாலும் தேவையில்லை!'  - இணைப்பு பேச்சால் கொந்தளித்த தினகரன்

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருக்கும் அணியில் இணைந்தால் தினகரனின் எதிர்காலம் தான் கேள்விக்குறியாகும். `அவர்கள் இருவரையும் பிடிக்கவில்லை' எனப் பிரசாரம் செய்வதால் தான் மக்கள் டி.டி.வி.தினகரன் பின்னால் வருகிறார்கள்.

` இரட்டை இலையே வந்தாலும் தேவையில்லை!'  - இணைப்பு பேச்சால் கொந்தளித்த தினகரன்

மீண்டும் அ.தி.மு.க, அ.ம.மு.க இணைப்பு குறித்த பேச்சு கிளம்பியுள்ளது. ` தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டவர்கள்தான் இதை வலியுறுத்துகின்றனர். இணைப்பு குறித்த பேச்சை எடுத்தாலே கொந்தளிக்கிறார் தினகரன்' என்கின்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள். 

தினகரன் கூட்டிய கூட்டம்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேசும்போது, ` அ.தி.மு.க-வும் அ.ம.மு.க-வும் ஒருங்கிணைந்தால் பலம் பொருந்தியதாக இருக்கும். தி.மு.கவையும் விரட்ட முடியும்' எனப் பேசியதாகத் தகவல் வெளியானது. இதற்குப் பதில் அளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ` காளானுடன் இமயமலை இணைய முடியுமா. பந்தியில் உட்காரவே இடமில்லையாம். இதில் இலை கிழிசல், ஓட்டை என்று தங்க தமிழ்ச்செல்வன் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது' என்றவர், ` சசிகலா, தினகரனைத் தவிர யார் வந்தாலும் வரவேற்போம்' எனப் பதில் கொடுத்தார். 

தினகரன்

`` தகுதிநீக்க வழக்கின் தீர்ப்புக்குப் பிறகுதான் இப்படிப்பட்ட பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. இதில் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு எந்தவித ரோலும் இல்லை. காளான் என்றெல்லாம் கூறி அ.ம.மு.க-வை அசிங்கப்படுத்தியிருக்கிறார் ஜெயக்குமார். அவர் அப்படித்தான் பேசுவார். சொல்லப் போனால், இணைப்பு என்ற முயற்சியே இங்கு நடக்கவில்லை. ஒரேநேரத்தில் மத்திய அரசின் மூன்று ஏஜென்சிகள் சசிகலாவிடம் விசாரணை என நெருக்கியதால், அ.தி.மு.கவுடன் இணைப்பை நடத்த பா.ஜ.க தொடுக்கும் நெருக்குதல் எனத் தகவல் பரவிவிட்டது. சொல்லப் போனால், அ.தி.மு.க-வில் இணையும் முடிவிலேயே தினகரன் இல்லை" என விவரித்த அ.ம.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், 

தினகரன்

`` எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருக்கும் அணியில் இணைந்தால் தினகரனின் எதிர்காலம் தான் கேள்விக்குறியாகும். `அவர்கள் இருவரையும் பிடிக்கவில்லை' எனப் பிரசாரம் செய்வதால்தான் மக்கள் டி.டி.வி.தினகரன் பின்னால் வருகிறார்கள். அப்படியிருக்கும்போது, அவர்களோடு எப்படி இணைவார். அப்படியே இணைய வேண்டும் என்றால், `எடப்பாடியையும் ஓ.பி.எஸ்ஸையும் நீக்குங்கள்' என தினகரன் கோரிக்கை வைக்கிறார். முதல்வர் பதவியையும் ஒருங்கிணைப்பாளர் பதவியையும் இவர்கள் இருவரும் விட்டுக்கொடுக்க வாய்ப்பில்லை. அ.தி.மு.க-வுக்குத் தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி போன்றவர்கள் போக விரும்பினால் போகட்டும். தினகரனுடன் இருக்கும் மற்றவர்கள் யாரும் போக மாட்டார்கள்" என்றார் உறுதியாக. 

தினகரன்

இந்த விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய மற்றொரு நிர்வாகி, `` அ.தி.மு.கவுடன் இணைய வேண்டும் என தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட சிலர் தினகரனிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதைப் பற்றிப் பேசிய தினகரன், ` அ.தி.மு.க என்ற ஜாதகம் செத்துப் போய்விட்டது. இனிமேல் அந்தக் கட்சியே கிடையாது. செத்துப் போன ஜாதகம் இனி செல்லுபடியாகாது. இரட்டை இலையையோ ஆட்சியில் இருப்பவர்களையோ நாம் நம்பிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. இனி இரட்டை இலையையே நமக்குக்  கொடுத்தாலும் வேண்டியதில்லை' எனக் கொதிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தினகரனால் உருவாக்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், அவரால் தான் வளர்ந்துகொண்டிருக்கிறது. தி.மு.கவை எதிர்த்து அரசியல் செய்வதுதான் அவருடைய இலக்கு" என்கிறார்.