` சேவை நடக்கவில்லை. தீம் மியூசிக் தான் கேட்கிறது!' - 181 சேவையால் நொந்துபோன பெண் நிருபர் | '181' helpline not be working!

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (11/12/2018)

கடைசி தொடர்பு:20:42 (11/12/2018)

` சேவை நடக்கவில்லை. தீம் மியூசிக் தான் கேட்கிறது!' - 181 சேவையால் நொந்துபோன பெண் நிருபர்

பாலியல் துன்புறுத்தல் அல்லது அத்துமீறல், அச்சுறுத்தல் எனப் பெண்கள் சந்திக்கும் சூழ்நிலைகளை உடனடியாக அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல '181' இலவச தொலைபேசிச் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார். அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் இந்தச் சேவை சரியாகச் செயல்படுகிறதா என்பதை என் மொபைல் மூலமாக செக் செய்தேன்.  

முதல் ரிங் அடித்ததும் ஆங்கிலத்தில், 'அழைத்ததற்கு நன்றி. வழிகாட்டுபவருக்கான இணைப்பைக் கொடுக்கும் வரை காத்திருக்கவும்!' என்றது ஆட்டோமேட்டிக் வாய்ஸ். காத்திருந்தேன். ஜாலியான தீம் மியூசிக் பிளே ஆக ஆரம்பித்தது. கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் வரை எவரும் பேசவில்லை. தொடர்ந்து அந்த தீம் மியூசிக் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது. சரி ஒருவேளை பத்தரை மணிக்கெல்லாம் ஆள்கள் வேலைக்கு வந்திருக்க மாட்டார்களோ என்று 11 மணிக்கு கால் செய்தேன். மறுபடியும் ஜாலியான தீம் மியூசிக்கை கேட்டேன். ம்ம்ம்ஹும் ஒருவரும் போனை அட்டென்ட் செய்யவில்லை.

அரசாங்கம் சொன்ன அறிவிப்பின்படி,

* பெண்களுக்கு ஆபத்து நேரங்களில் உதவி செய்யவும், பாதுகாப்பு தரவும் தமிழக அரசு 181 ஹெல்ப்லைன் சேவையைத் தொடங்கியுள்ளது.

இது 24 மணி நேர கட்டணமில்லா சேவை. தமிழகத்தின் எந்த மூலையிலிருந்தும் இந்த எண்ணுக்குப் பெண்கள் அழைக்கலாம்.

போனில் அழைக்கும் பெண்களுக்கு உதவ காவல்துறையினர், வழக்கறிஞர்கள், மனநல ஆலோசகர்கள் இங்கு இருப்பார்கள்.

* திடீர் ஆபத்து, குடும்ப வன்முறை, வரதட்சணைக் கொடுமை, பாலியல் தொந்தரவு, உடல் மற்றும் மன பாதிப்புகளுக்கு பெண்கள் உதவி கோரலாம்.

* எல்லா காவல் நிலையங்களும் இந்தச் சேவை மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், உடனடி உதவியும், ஆலோசனையும் மீட்பும் கிடைக்கும்.

*  பாதிக்கப்பட்ட பெண்கள், இப்போது பாதுகாப்பாக உள்ளார்களா என சமூக நலத்துறை அவ்வப்போது கண்காணிக்கும்.

இது தொடர்பாகக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்வதற்காக சமூக நலத்துறை துணை இயக்குநர் மாலதி ஹெலனிடம் பேசினோம்.

``முதல்ல ஸாரிங்க.. நேற்றுதான் இந்தச் சேவையைத் தொடங்கியிருக்கிறோம். ஆரம்பித்த முதல் நாளே கிட்டத்தட்ட 2,500-க்கும் மேற்பட்ட போன் கால்கள் வந்துவிட்டன. சராசரியான புகார் சேவை மையம் இதுவல்ல. தன்னுடைய பிரச்னையைப் பகிரும் நபரிடம் நீண்ட நேரம் பேச நேரிடலாம். அந்தச் சமயம், வேறு யாராவது போன் செய்யும்போதுதான் இந்த மாதிரியான பிரச்னைகள் ஏற்படுகின்றன. கூடுதல் பணியாளர்களை நியமித்து, இன்னும் ஒருவாரத்திற்குள் இந்தப் பிரச்னை சரிசெய்யப்படும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க