வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (11/12/2018)

கடைசி தொடர்பு:16:53 (11/12/2018)

‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்

தந்தி டி.வி-யின் மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, தன் பதவியை ராஜினாமாசெய்துள்ளார். இது, பெரும் விவாதமான நிலையில், அதற்கு அவரே வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார். 

பிரபல பத்திரிகையாளரும், தந்தி டி.வி-யின் தலைமை செய்தி ஆசிரியருமான ரங்கராஜ் பாண்டே ராஜினாமா செய்துவிட்டதாக நேற்று முதல் சமூக வலைதளங்களில் செய்திகள் உலாவந்தன.  'தந்தி டி.வி' ரங்க ராஜ் பாண்டே என்று கூறினால்தான் பலருக்கு அடையாளம் தெரியும். அந்த அளவுக்கு அந்த சேனலில் இருந்து புகழ்பெற்றார். இதற்கிடையில், இவர் புதிதாக ஒரு சேனல் தொடங்க இருப்பதாகவும், ரஜினிக்கு அரசியல் ஆலோசகராகச் சேர இருப்பதாகவும் பல வதந்திகள் இணையத்தில் வலம்வந்தன. இந்நிலையில், தான் ராஜினாமா செய்தது உண்மைதான் எனக் கூறி, அதற்கான விளக்கத்தையும் தெரிவித்துள்ளார் பாண்டே. 

 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “ நான் தந்தி டி.வி-யின் தலைமை செய்தி ஆசிரியர் என்ற பொறுப்பில் இருந்து விலகி உள்ளேன் என நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். நான் தந்தி டி.வி-யில் இருந்து விலகி உள்ளேனே தவிர, பத்திரிகையாளர் என்ற என் கடமையில் இருந்து விலகவில்லை. தொடர்ந்து இதே துறையில் இருந்து, இது தொடர்பான பணிகளை மட்டுமே செய்ய உள்ளேன். நான் பதவி விலகியதற்கு எந்தப் பெரிய காரணமும், சிக்கலும், குழப்பமும் இல்லை. இது, நான் நீண்ட நாள்களாக யோசித்து எடுத்த முடிவுதான். தினசரி ஒரே வேலையைச் செய்வதால் ஏற்பட்ட அயர்ச்சியின் காரணமாக, அதிலிருந்து வெளியில் வரும் முயற்சிதான் இது. வேறு எந்தக் காரணமும் இல்லை. 

முன்னதாக நான் வேலைசெய்த எந்தக் குழுமத்தையும் குறை கூறவில்லை. அவ்வாறு நான் கூறினால், அது மிகவும் அபாண்டமாக இருக்கும். அவர்கள் என்னை ராஜா போல் பார்த்துக்கொண்டார்கள். எனக்கு அங்கு எந்தக் குறையும் இல்லை. அனைத்துத் துறைகளிலும் சிறுசிறு பிரச்னைகள் இருக்கும். நானும் அதைச் சந்தித்துள்ளேன். ஆனால், என் ராஜினாமாவுக்கு அதைக் காரணமாகக் கூற முடியாது. அடுத்த தலைமுறையினருக்கு வழிவிடும் நோக்கிலும் என் ராஜினாமா உள்ளது. இதன்மூலம், குறைந்தது 6 பேருக்காவது மாற்றம் ஏற்படும் என நான் நினைக்கிறேன். என் ராஜினாமா முழுவதும் நல்லதுக்காகவே வித்திடும் என நினைக்கிறேன்” என்று பேசியுள்ளார்.